கோட்டாவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை சுதந்திரக் கட்சி முன்னெடுக்காது- மஹிந்த அமரவீர
14 Feb,2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் சுதந்திர கட்சி முன்னெடுக்காது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்நிலையில், பொதுத் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவ்ர கூறகையில், “முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இணைத் தலைமைத்துவம் வழங்குமாறு நாம் கோரவில்லை. அது ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் என்பதாலேயே கட்சித் தலைவர் கூட்டத்தில் பேசப்பட்டது. எனவே இவ்விடயத்தை வைத்து முரண்பட்டுக்கொள்ள நாம் விரும்பவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகிய உயர்மட்ட சிரேஷ்ட தலைவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சுதந்திரக் கட்சியை விமர்சிக்கவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் நாம் பெற்றுக் கொடுத்த வெற்றியை அவர்கள் மதிக்கின்றனர். எனவே தனித்து பயணிக்கும் முடிவை அவர்கள் எடுக்கமாட்டார்கள்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளை ஒருபோதும் சுதந்திரக் கட்சி முன்னெடுக்காது. எனவே பொதுத் தேர்தலில் நாம் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவோம்.
ஜனாதிபதி தேர்தலில் அவரைப் பாதுகாத்ததைப் போலவே பொதுத் தேர்தலில் பாதுகாப்போம். காரணம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்குள்ள வரப்பிரசாதங்கள், அதிகாரங்கள் என்பவற்றைப் புறந்தள்ளி புதியதொரு அரசியல் சூழலை ஏற்பத்தியிருக்கிறார்.
அவர் இந்தப் போராட்டத்தைத் தொடர தனித்து பயணித்தால் முடியாது. எனவே நாம் அவருக்கு துணை நிற்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்