கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி!சிறப்பு முகாம்
31 Jan,2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 17 பேர் IDH எனப்படும் கொழும்பு நோய் தொற்றியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு அறிவித்துள்ளது.
அத்துடன், நோய்த் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்பட்ட ஐவர் நேற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இவர்களின் இரத்த மாதிரிகளை சோதனைக்குட்படுத்தியபோது, கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
சீனாவிலிருந்து நாடு திரும்புபவர்களை பரிசோதிக்க சிறப்பு முகாம்
சீனாவிலிருந்து இலங்கை திரும்பும் பல்கலைகழக மாணவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக, 48 மணி நேரத்திற்குள் இலங்கை இராணுவ வைத்திய முகாம் ஒன்று தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.
இரண்டு அறைகள் கொண்ட இந்த வைத்திய முகாமில் சீனாவிலிருந்து வரும் மாணவர்கள் இரண்டு வாரங்கள் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
சீனாவில் அசூர வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகின்றதை அடுத்து, உலக நாடுகள் தங்களது நாட்டு பிரஜைகளை அழைத்து வர துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
அந்தவகையில் சீனா பல்கலைகழகங்களில் பயின்ற இலங்கை மாணவர்களையும் அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவ்வாறு அழைத்து வருபவர்களை உடனடியாக வீட்டுக்கு அனுப்பாமல் தியத்தலாவை இராணுவ வைத்தியசாலை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள, வைத்திய முகாமில் தங்க வைத்து இரு வாரங்கள் பரிசோதித்து விடுவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரமே தியத்தலாவ இராணுவத்தின் எஸ்.எஸ். கொமாண்டோர் மேஜர் ஜெனரல் வடுகே தலைமையில் இரண்டு அறைகள் கொண்ட வைத்திய முகாமை 48 மணி நேரத்தில் தியத்தலாவ இராணுவத்தினர் அமைத்து வருகின்றனர்.
இலங்கை வரலாற்றில் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் வைத்திய முகாம் அமைக்கபடுகின்றமை இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.