காணாமல்போன மருத்துவபீட மாணவனின் சடலம் வவுணதீவு வாவியில் மீட்பு
15 Jan,2020
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (14) பிற்பகல் கரையாக்கன்தீவினை அண்டியுள்ள வாவி பகுதியிலேயே குறித்த சடலம் கரையொதுங்கியுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் அண்மையில் காணாமல்போன கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனின் சடலம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு மருத்துவபீடத்தில் முதலாம் வருடம் கற்றுவரும் தலவாக்கலை லிந்துலை பகுதியை சேர்ந்த சி.மோகன்ராஜ் என்னும் மாணவன் நேற்று முன்தினம் முதல் காணாமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பிள்ளையாரடியில் உள்ள வளாக விடுதியில் இருந்து சென்றவர் நேற்று முன்தினம் மாலை வரையில் விடுதிக்கு திரும்பாத நிலையில் நேற்று மாணவர்களினால் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் இறுதியாக அவரது கையடக்க தொலைபேசி இணைப்பு கல்லடி பாலத்திற்கருகில் செயற்பட்டுள்ளமையினால் கல்லடி பாலம் அருகிலும் கடற்படை மற்றும் பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டனர்.
குறித்த மாணவன் காணாமல்போனது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில் மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.