கோத்தாபய அரசின் அதிரடி! இருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை
19 Dec,2019
கடந்த ஆட்சியின் போது ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட இருவருக்கு கடூழியச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிக்குழு பிரதானி எச்.ஐ.மஹநாம மற்றும் அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாஸ திசாநாயக்க ஆகியோருக்கு கொழும்பு விசேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றினால் வருட கடூழியச்சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கோடி ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முதலாவது பிரதிவாதி மஹநாமவுக்கு 20 வருட கடூழியச் சிறைத்தண்டனையுடன் 65 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது பிரதிவாதியான பியதாஸ திசாநாயக்கவுக்கு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனையுடன் 55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கந்தளாய் சீனி தொழிற்சாலையின் கலப்பு உலோகம் மற்றும் கட்டடத்தை வழங்குவதற்கு இந்திய வர்த்தகரிடம் 5.4 கோடி ரூபாவை இலஞ்சமாகக் கோரி, அதில் 2 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்றதாக இவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.
பிரதிவாதிகளுக்கு எதிராக 24 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.