வெள்ளை வான் சாரதியின் வாக்குமூலம்;!
19 Dec,2019
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கோரியதற்கிணங்கவே வெள்ளை வான் கடத்தல்கள் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியதாக, கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் வாக்குமூலம் அளித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், ராஜித சேனாரட்ன ஏற்பாடு செய்திருந்த உடகவியலாளர் சந்திப்பில் வெள்ளை வான் சாரதி மற்றும் சாட்சி என்று கூறப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபர்கள் இருவரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இதுதொடர்பாக நேற்று (பதன்கிழமை) கொழும்பு பிரதம நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ராஜித சேனாரட்ன கோரியதற்கிணங்கவே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் தொடர்பாக ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொய்யான தகவல்களை அளித்ததாக சந்தேக நபர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற 3 மில்லியன் ரூபாயை தாங்கள் கோரியதாகவும் அமெரிக்கா அல்லது இங்கிலாந்து தூதரகத்தில் வேலையும் இரண்டு வீடுகளும் வழங்க ராஜித சேனாரட்ன ஒப்புக்கொண்டதை அடுத்து, 2 மில்லியன் ரூபாயாக அதனை குறைக்க இணங்கியதாகவும் சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ராஜித சேனாரட்ன எழுதிக் கொடுத்ததையே தாங்கள் கூறியதாகவும் அங்கு கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.