தமிழர்களுக்கு அதிகார பகிர்வு சாத்தியமற்றது: கோட்டாபய ராஜபக்ஷ
16 Dec,2019
இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு வழங்குவது நடைமுறை சாத்தியமற்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
70 வருடங்களாக அதிகார பகிர்வு தொடர்பில் அரசியல்வாதிகள் கருத்துக்களை மாத்திரமே வெளியிட்டு வருகின்ற நிலையில், அது தொடர்பில் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களும் சமவுரிமையுடன் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தான் உள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அதிகார பகிர்வு என்பது ஒரு அரசியல் மயப்பட்ட விடயம் மாத்திரமே எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அபிவிருத்திகளை மேற்கொள்வதன் ஊடாகவே, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு முடியும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு கௌரவமாக வாழ முடியாது என தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதாக குறிப்பிட்ட கோட்டாபய ராஜபக்ஷ, தமிழ் மக்களுக்கு ஏன் கௌரவமாக வாழ முடியாது என்ற கேள்வியையும் இதன்போது எழுப்பினார்.
பெரும்பான்மை சிங்கள மக்களினால் நிராகரிக்கப்படும் அதிகார பகிர்வு, சமஷ்டி (கூட்டாட்சி) போன்ற விடயங்களை, அவர்களின் அனுமதியின்றி எவ்வாறு வழங்குவது என கோட்டாபய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாட்டில் ஆட்சியிலிருந்த அனைத்து அரசியல்வாதிகளும் அதிகார பகிர்வு தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டார்களே தவிர, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளை முதலில் தீர்க்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அதிகார பகிர்வு என்ற விடயமானது முற்றிலும் பொய்யான ஒன்று என கூறியுள்ள அவர், பெரும்பான்மை சிங்கள மக்கள் இருக்கின்ற நாட்டை பிரித்து அதிகார பகிர்வை வழங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி தான் ஜனாதிபதியாகியுள்ள போதிலும், தான் அனைவருக்கும் இந்த நாட்டின் ஜனாதிபதி எனவும் கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கு சிறந்த சேவையாற்றக்கூடிய அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவை தான் நியமித்துள்ளதாகவும், அவர் தமிழ் மக்களுக்கான அனைத்து சேவைகளையும் உரிய முறையில் முன்னெடுப்பார் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
காணாமல் போனோர் விவகாரம்
யுத்தக் காலத்தில் காணாமல் போயுள்ளதாக கூறப்படுவோருக்கு காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ் வழங்குவதே சிறந்ததொரு தீர்வாக இருக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கில் மாத்திரமன்றி, தென் பகுதியிலுள்ள பலர் காணாமல் போயிருந்ததை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தில் காணாமலானோர் உயிரிழந்திருக்கலாம் என கூறிய அவர், அதனை அவர்களின் பெற்றோரினால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் உணர முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனாலேயே காணாமல் போனோர் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருவதாக கூறிய அவர், காணாமல் போனோருக்கான சான்றிதழை வழங்குவதே சிறந்ததாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிஸர்லாந்து தூதரக விவகாரம்
சுவிட்சர்லாந்து தூதரகத்திலுள்ள பெண் அதிகாரியொருவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
MINISTRY OF FOREIGN AFFAIRS SRILANKA
குறித்த பெண் அதிகாரியின் வாக்குமூலத்தில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றமையினால் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுவிஸர்லாந்து தூதரகத்துக்கும், தமக்கு எந்தவித முரண்பாடுகளும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
19ஆவது திருத்தம் ரத்து
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தமானது, பல குறைபாடுகளுடனான திருத்தம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த திருத்தச் சட்டத்தை விரைவில் ரத்துசெய்து, புதியதொரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மலையக மக்களுக்கான சம்பள பிரச்சினை
பெருந்தோட்ட மலையக மக்கள் எதிர்நோக்கும் சம்பள பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
தாம் தற்போதே ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், மலையக மக்களுக்கு மானிய உதவிகளை வழங்கவும் தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இன்றைய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்