தேர்தல் கடமைக்காக சென்ற 51 பேர் உணவு விஷமாகி வைத்தியசாலையில் அனுமதி ; சதியாக இருக்கலாமென கண்டறிய விசாரணை
15 Nov,2019
கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான வாக்கெண்ணும் நிலையத்தின் பணிகளுக்காக கடமையில் அமர்த்தப்பட்டிருந்த அரச ஊழியர்கள் 51 பேர் உணவு விஷமானதால் இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதையடுத்து ஏற்பட்ட நிலைமையின் பின்னர் குறித்த 51 பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 4 சிவில் பாதுகாப்பு படையினரும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் கூறினர்.
இந் நிலையில் இந்த உணவு விஷமான விவகாரம் சதி நடவடிக்கையா அல்லது அதற்கான வேறு காரணிகள் உள்ளதா என்பதைக் கண்டறியும் விஷேட விசாரணைகளின் பொறுப்பு சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த காலை உணவு பொரளை பகுதியில் உள்ள உனவகம் ஒன்றிலிருந்தே விநியோகிக்கப்பட்டுள்ளதாக சி.சி.டி.யின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ள நிலையில், அந்த உணவு மாதிரிகளை விஷேட பரிசோதனைகளுக்குட்படுத்தவும், வேறு சாட்சிகளை தேடியும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந் நிலையில் உணவு விஷமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது வரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.