மயானங்களை விரிவாக்குவதல்ல எமது நோக்கம் : காலியில் சஜித்
14 Nov,2019
எதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது.
எனினும் நான் ஜனாதிபதி தலைமையில் வெற்றியீட்டிய பின்னர் எனது தலைமையில் ஒருமித்த சுபீட்சமான இலங்கையொன்று உருவாக்கப்படும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
காலி நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதிய ஜனநாயக முன்னணியின் 151 ஆவது தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
இன்று காலியில் நடைபெறும் இத்தேர்தல் பிரசாரக்கூட்டம் எனறு 151 ஆவது கூட்டமாகும். எமது நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக்கூட்டங்களை நடத்திய ஒரே ஜனாதிபதி வேட்பாளர் நானே என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
காலி மாவட்டத்திற்கென பிரத்யேகமான அபிவிருத்தித் திட்டமொன்றைத் தயாரித்து, 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் 17 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதியாகிய எனது விசேட கண்காணிப்பின் கீழ் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தயாராக இருக்கின்றேன்.
அதேபோன்று சிறியளவில் மழை பெய்தாலும் கூட, இப்பிரதேசம் நீரில் மூழ்கும் நிலை காணப்படும் நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம். காலி துறைமுகம், கொக்கல விமானநிலையம் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வோம்.
அதுமாத்திரமன்றி பலவருடகாலமாக எந்தவொரு அரசாங்கமும் செயற்படுத்த முன்வராத, குப்பைமேட்டை அகற்றுவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். ஒட்டுமொத்தமாக காலியை ஒரு நவீன நகரமாக்குவதற்கான பணிகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்.
மிகக்குறுகிய காலத்தில் வறுமையை இல்லாதொழிப்பதற்கான சமுர்த்தியுடன், ஜனசவிய வேலைத்திட்டத்தையும் செயற்படுத்துவோம். அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இரு சீருடைத்துணிகளும், சப்பாத்தும், மதிய உணவும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துப் பயிர்ச்செய்கையாளர்களுக்கும் இலவசமாக உரம் வழங்கப்படும்.
மேலும் சிறுவயதிலேயே துறவறம்பூணும் பௌத்த பிக்குகளின் பிரிவெனா கல்வி மற்றும் அவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்வேன்.
அதுமாத்திரமன்றி நான் இந்த மேடையில் ஏறியதும் சிறுமியொருவர் யோசனையொன்றைப் பரிந்துரைத்தார்.
அதாவது 55 வயதிற்கு மேற்பட்டோருக்கு நிவாரணத்தொகை ஒன்றையும், 18 – 25 வயதிற்கு இடைப்பட்டோரிற்கு குறைந்த விலையில் டேட்டா பக்கேஜ் ஒன்றையும் வழங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
எனவே ஏனையோர் எழுதித்தருவதை பார்த்து வாசிப்பதற்காக நான் இங்கு வரவில்லை. அனைத்துத் தரப்பினரதும் யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
அதன்படி இளையோருக்கு குறைந்த விலையில் டேட்டா பக்கேஜை வழங்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம். எதிரணியினர் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதற்குத் தெரிவு செய்யும் இடங்களைப் பார்க்கும் போது மயானங்களை மேலும் விரிவாக்குவதே அவர்களுடைய எதிர்பார்ப்பு என்று தோன்றுகிறது.
எனினும் நான் ஜனாதிபதி தலைமையில் வெற்றியீட்டிய பின்னர் எனது தலைமையில் ஒருமித்த சுபீட்சமான இலங்கையொன்று உருவாக்கப்படும்