இலங்கையின் இரு பெரும் சொத்துக்களை விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ராஜபக்சவினர்!
12 Nov,2019
கொழும்பு காலி முகத்திடலில் இருந்த இராணுவத் தலைமையகத்தை விற்பனை செய்து பெற்ற பணத்தை தேசப்பற்றாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ராஜபக்சவினர் சொகுசு வாழ்க்கைக்காக செலவு செய்திருப்பதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம சாட்டியுள்ளார்.
ஷெங்கரிலா நட்சத்திர விடுதி அமைப்பதற்காக விற்பனை செய்யப்பட்ட இந்த பெரும் நிலப்பரப்பின் ஊடாக பெற்ற பணத்தில் பல்வேறு சொத்துக்களையும் ராஜபக்சவினர் கொள்வனவு செய்திருப்பதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க பட்டியலிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பீறேமதாச வெற்றிபெற்றால் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்துவரும் இந்தியா, அமெரிக்கா ஆகிய பலம்வாய்ந்த நாடுகளுக்கு உள்நாட்டுக் காணிகளையும், வளங்களையும் விற்பனை செய்யும் நடவடிக்கை தொடரும் என்றும், நாடு இராணுவமும் காட்டிக்கொடுக்கப்படும் என்றும் ராஜபக்ச சகோதரர்களும், அவர்களின் தலைமையிலான அணியினரும் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள மில்லேனியம் சவால் ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டிற்குள் அமெரிக்கப் படைகளை வரவழைத்து காணிகளை அந்நாட்டிற்கு தாரைவார்க்கவும் திட்டமிட்டுள்ளதாக எச்சரித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி, தேசப்பற்றாளர்களாகவும், இராணுவம் உள்ளிட்ட முப்படைகளையும் காப்பாற்றுபவர்களாகவும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ராஜபக்சவினரே இராணுவத் தலைமையகக் காணியை விற்று அதில் கிடைத்த பணத்தை ஏப்பமிட்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
“மோசடி குற்றச்சாட்டுக்களை நாங்கள் முன்வைத்தபோது அரசியல் பழிவாங்கல், சேறு பூசல்கள் என்று ராஜபக்சவினர் தெரிவித்துவந்தனர். ஒரு டொலரையாகினும் தாம் மோசடி செய்ததாக நிரூபித்தால் கழுத்தை அறுத்துக்கொள்வதாக மஹிந்த ராஜபக்ச சூளுரைத்திருந்தார்.
இந்நிலையில் ஷெங்கரிலா ஹோட்டல் மற்றும் இராணுவத் தலைமையகம் மாற்றலுக்குப் பின்னால் இருக்கின்ற மோசடிகளை அம்பலப்படுத்துகிறேன்.
பிரித்தானியர் காலத்திலிருந்து காலி முகத்திடலில் இருந்த இராணுவத் தலைமையகம் இருந்த காணியை இரண்டு பகுதிகளாக கடந்த அரசாங்கம் விற்பனை செய்தது. 2010 ஆம் ஆண்டில் 06 ஏக்கர் நிலத்தை 8250 மில்லியன்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
பின்னர் 2011 ஆம் ஆண்டில் மேலும் 04 ஏக்கர் வழங்கப்பட்டது. வெளிநாடுகளுக்கு காணிகளை விற்பனை செய்வதாக இப்போது கூறுகின்ற மஹிந்தவே அன்று காணிகளை வெளிநாடுகளுக்கு விற்றார். மஹிந்த ராஜபக்ச அரசியலமைப்பிலிருந்த காணி உரிமம் வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கு இந்தக் காணியை வழங்கியிருக்கின்றார்.
தனியார் நிறுவனங்கள் இரண்டை வைத்து இதற்கான சரியான ஆவணங்கள் சிங்கப்பூரில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. 05 மில்லியன் டொலர்கள் இதற்காக ராஜபக்சவினருக்கு வழங்கப்பட்டது. இதில் பெறப்பட்ட பணத்தின் மூலம் தங்காலையில் சொகுசு உணவகம் ஒன்றும் நாமல் ராஜபக்சவினால் கொள்வனவு செய்யப்பட்டது.
இராணுவத்தினரை தலைமையகத்திலிருந்து வெளியேற்றி அதில் பெற்ற பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ள மஹிந்த ராஜபக்ச தனது கழுத்தை வெட்டுவாரா இல்லையா என்பதில் பிரச்சினையில்லை என்றாலும் இந்த ஆதாரங்கள் அரசியல் சேறுபூசுதலா இல்லையா என்பதை அவர்கள் கூறவேண்டும்.
அதேபோலவே இராணுவத் தலைமையகம் விற்பனை செய்யப்பட்டு பெற்ற தரகுப் பணத்திலா பெசில் ராஜபக்சவின் மல்வானை இல்லமும் வாங்கப்பட்டது என்பதையும் கேட்க விரும்புகின்றேன்.
அதேபோல நாமல் ராஜபக்சவுக்கு இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பெற்ற தரகுப் பணத்தில் தங்காலையில் சொகுசு விடுதி ஒன்றும் வாங்கப்பட்டமைக்கும் ஆதாரங்கள் அம்பலமாகியுள்ளன. அமெரிக்காவின் பெண்டகன் தலைமையகமானது 60 இலட்சம் பரப்பாகும். ஆனால் 27 இலட்சம் பரப்பைக் கொண்டதாக பழைய இராணுவத் தலைமையகம் இருந்தது.
அதனை விற்பனை செய்ததற்காக படையினரை வாடகையில் மாடிகளில் அமர்த்தியதற்காக வருடாந்தம் 504 மில்லியன் செலவாகியது.
09 வருடங்களுக்கு 4544 மில்லியன் சென்றது. ஆகவே விற்பனை செய்யப்பட்டு பெற்ற பணத்தில் பாதிப்பணம் இவற்றுக்கே செலவாகிவிட்டது” என அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம சாட்டியுள்ளார்.