வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் திருமலை நிலத்தடி சித்திரவதை முகாமில் வைத்து கொல்லப்பட்டனரா? – சி.ஐ.டி
09 Nov,2019
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளை வானில் (Van) கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக சி.ஐ.டி. குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், முகாமின் கன்சைட் எனும் நிலத்தடி சித்திரவதை முகாமுக்குள் கடத்தப்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டி. சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இதற்காக எம்.பி. 5 ரக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கும் சி.ஐ.டி., கன்சைட் சித்திரவதை முகாமுக்குள் இடம்பெற்றதாக நம்பப்படும் கொலைகள் குறித்து உறுதியான முடிவுக்கு வர தற்போது மருத்துவ பகுப்பாய்வு மற்றும் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
இதற்கான தேவையான அனுமதிகளை கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவிடமிருந்து சி.ஐ.டி. பெற்றுக்கொண்டுள்ளது.
அத்துடன் சி.ஐ.டி.க்கு கிடைத்த சாட்சியங்கள் மற்றும் வாக்குமூலங்களின் பிரகாரம் இக்கொலைகள், கன்சைட் வதை முகாமுக்கு பொறுப்பாகவிருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் இருந்த விஷேட உளவுப் பிரிவொன்றினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுவதாகவும் இது குறித்து மிக ஆழமான விசாரணைகள் இடம்பெற்றுள்ளதாகவும் சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.