இலங்கை விமான நிலையத்தில் சீன ரோபோக்கள் - என்ன செய்யப் போகின்றன?
02 Nov,2019
இலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.
இத்தகைய பணிகளுக்குவே ரோபோக்களை பயன்படுத்துவது இலங்கை வரலாற்றில் இது முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விமான நிலையத்தில் பயணிகள் நுழைகின்ற வளாகத்தில் ஒரு ரோபோவும், வெளியேறும் வளாகத்தில் இன்னொரு ரோபோவும் வைக்கப்பட்டுள்ளன.
750 மில்லியன் ரூபா மதிப்புள்ள இந்த ரோபோக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீன அதிகாரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்பளிப்பாக வழங்கினர்.
விமான நிலைய வளாகத்திற்குள் போதைப்பொருள் மற்றும் வெடிப்பொருட்களை கொண்டு வரும் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் புதிய தொழில்நுட்பத்துடன் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.
போதைப்பொருள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியும் இந்த அதிநவீன ரோபோக்களை இலங்கைக்கு சீனா கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி அன்பளிப்பாக வழங்கியது.
750 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த ரோபோக்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீன அதிகாரிகள் வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
போதைப்பொருட்களை ஒழிக்கும் நோக்குடன் செயல்படும் ஜனாதிபதியின் கொள்கைக்கு அமைய சீன அரசால் இந்த ரோபோ அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இத்தகைய நவீன ரோபோக்களை போதைப்பொருட்களை தேடி கண்டுபிடிப்பதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் இலங்கை பாதுகாப்பு துறையினர் பயன்படுத்துவது இதுவே முதல்முறை.
5 மீட்டர் சுற்றளவு தூரத்தில் இருக்கும் நபர்கள் கொண்டு வரும் பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டுபிடிக்கும் வகையில் இந்த ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஒருவரின் உடலில் மறைத்து வைத்துள்ள வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் அடையாளம் கண்டுக்கொள்ளும் கருவிகளும் இந்த ரோபோக்களில் பொறுத்தப்பட்டுள்ளன.
மேலும், இவற்றுக்குள் பல்வேறு செயல் திறன்கள் கொண்ட கருவிகள் பல பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருளை ஒழிக்கும் இலங்கை அரசாங்கத்தின் திட்டத்திற்கு இந்த ரோபோக்கள் அதிக பங்காற்றும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.