இராணுவத்தினர் அணியும் உடைக்கு ஒப்பான உடை அணிந்து முகத்தை மூடிக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த
01 Nov,2019
இராணுவத்தினர் அணியும் உடைக்கு ஒப்பான உடை அணிந்து முகத்தை மூடிக் கொண்டு ஆசிரியை ஒருவரின் வீட்டினுள் நுழைந்து இரண்டு பிள்ளைகளின் தாயான அப்பெண்ணை கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் அங்கிருந்து 2,43,000 ரூபா பெறுமதியான உடைமைகளைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற இரு சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
நொச்சியாகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவரே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவராவார்.
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 46 வயதுடைய குறித்த பெண்ணின் வீட்டில் அப்பெண்ணின் மகன் மற்றும் உறவினர் ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டைத் திறந்து உட்சென்ற இருவர் சத்தம் போட்டால் சுட்டுக் கொலை செய்து விடுவோம் என அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அவ்வீட்டிலிருந்த மூவரும் மௌனமடைந்துள்ளதோடு கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களில் ஒருவரைக் கட்டிலில் கட்டி வைத்துவிட்டும் அப்பெண்ணின் மகனை மற்றொரு அறையில் அடைத்து வைத்து விட்டும் குறித்த ஆசிரியையின் கழுத்தில் கத்திவை வைத்து அச்சுறுத்தி அப்பெண்ணை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன் பின்னர் அந்த ஆசிரியையின் மோட்டார் சைக்கிளுடன் அவர் அணிந்திருந்த ஒரு சோடி காதணி மற்றும் அங்கு தங்கியிருந்த மற்றொருவர் அணிந்திருந்த 11, 500 ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியையும் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் 35 — 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களுள் ஒருவர் இராணுவத்தினர் அணியும் ஆடையை ஒத்த டீ சேர்ட் அணிந்திருந்ததாகவும் அவர்கள் வீட்டினுள் வரும் போது தங்கள் முகத்தை துணியினால் கட்டி மறைத்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட ஆசிரியை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய துரித விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.