மாகாணங்களுக்கு அதிகாரப்பகிர்வு – சஜித்தின் தேர்தல் அறிக்கை வெளியீடு
01 Nov,2019
புதிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை தனது தேர்தல் அறிக்கையை கண்டியில் வெளியிட்டுள்ளார். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை அவர் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பித்து அதனை வெளியிட்டார்.
மகாநாயக்கர்களிடம் தேர்தல் அறிக்கையை கையளிக்கும் நிகழ்வில் ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றனர்.
இதன் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சஜித பிரேமதாச, புதிய அதிபராகப் பதவியேற்றதும், எல்லா இருதரப்பு உடன்பாடுகளையும் மீளாய்வு செய்யப் போவதாக கூறினார்.
நொவம்பர் 16ஆம் நாளுக்கு முன்னர் செய்து கொள்ளப்படும் எந்த உடன்பாட்டுக்கும் தாம் கட்டுப்படவில்லை என்றும், சிறிலங்காவின் இறைமைக்கு அச்சுறுத்தல் எனக் கருதும் எந்த உடன்பாடு குறித்தும் கவனம் செலுத்தி அதில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் அறிக்கை மகாநாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, கண்டி குயீன்ஸ் விடுதியில், நடந்த நிகழ்வில் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது,
இதில் ஐதேக தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் பங்கேற்றனர்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையில் மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
எல்லா நாடுகளின் உறவுகளையும் மதிக்கின்ற வெளிவிவகாரக் கொள்கை, பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், துரித உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், ஆகிய வாக்குறுதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.