கூட்டமைப்பின் நிபந்தனைக்கு ஒருபோதும் அடிபணியோம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ கூறுகிறார்
23 Oct,2019
ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள நிபந்தனைகள் இதுவரையில் எமக்கு கிடைக்கப் பெறவில்லை. அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியமும் எமக்கு கிடையாது. காரணம் நாட்டை பிளவடையச் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
‘ வெற்றிகரமான நோக்கு – உழைக்கும் நாடு’ என்ற தொனிப்பொருளில் மாத் தறை – தெவிநுவரவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்று கையிலேயே போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். 30 வருட கால யுத்ததை நாம் நிறைவுக்கு கொண்டு வந்தோம். யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களுக்குள் பல்வேறு அபிவிருத்திகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டன. எனினும் 2015 இல் எமது அரசாங்கம் தோல்வியடைந்தது. இம்முறை வரலாற்றில் இல்லாதவாறு அதி கூடிய வாக்குகளால் நாம் வெற்றி பெறுவோம் என்பதை கோத்தாபய ராஜபக்ஷவுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அனைவரையும் அச்சல் ஆழ்த்தியது. ஐக்கிய தேசிய கட்சியோ அமைச்சரவையோ தகவல்கள் கிடைத்திருந்தும் இதனை கவனத்தில் கொள்ளவில்லை. எனினும் முஸ்லிம் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முஸ்லிம் அமைச்சர்களதும், ஆளுனர்களதும் விருப்பத்திற்கு ஏற்ப குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறு இவர்கள் விடுவிக்கப்படலாம் என்ற கேள்வி இன்னமும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இது தொடர்பான அச்சம் இன்னும் மக்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு சிறந்த தீர்வு தேசிய பாதுகாப்பு பற்றிய பொறுப்புடைய கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவது மாத்திரமேயாகும்.
தற்போது சிலர் இராணுவ வீரர்கள் குறித்து பேசுகிறார்கள். மக்களுடன் கைகோர்த்து உயிரிழக்கவும் தயாராக இருப்பதாகக் கூறுகின்றனர். மக்களை சேர்த்துக் கொண்டு மரணிக்க தேவையில்லை. வேண்டுமானால் அவர்கள் தனித்து மரணிக்கட்டும். தான் மிகக் குறைந்த நேரமே உறங்குவதாக சஜித் பிரேமதாச கூறுகின்றார். அதிக நேரம் பேசுவதாகவும் கூறுகின்றார். அவர் அவ்வாறு தொடர்ந்து பேசாமல் இருப்பதே அவரது உடல் நலத்துக்கு சிறந்தது என்பதை அறிவுறுத்தலாகக் கூறுகின்றேன்.
2015 ஆம் ஆண்டைப் போன்றே இப்போதும் மக்களை ஏமாற்ற முடியும் என்று எண்ணுகின்றனர். வாக்குறுதிகள் வழங்கி நாம் யுத்தத்ததை நிறைவுக்கு கொண்டு வரவில்லை. எனினும் நிறைவடையச் செய்தோம். இதனை மீண்டும் சிந்திக்க வேண்டும். தற்போது சிறு சிறு விடயங்களுக்குக் கூட வரி செலுத்த வேண்டியிருக்கிறது. ஒழுங்குமுறை எதுவுமின்றி மக்கள் வறுமையில் தள்ளப்படும் செயற்பாடே இதுவாகும். எனினும் நாம் கூறும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நிதி எங்கிருந்து கிடைக்கும் என்று கேட்கிறார்கள். யுத்ததத்தின் போதும் இதனையே கேட்டனர். ஆனால் நாம் யுத்தத்தையும் நிறைவடையச் செய்து 10 வருடங்கள் அபிவிருத்தியும் செய்திருக்கின்றோம்.
இன்று பெலியத்தையுடன் புகையிரத சேவை நிறைவடைகின்றது. எமது ஆட்சி தொடர்ந்திருந்தால் இது கதிர்காமம் வரை தொடர்ந்திருக்கும். அதி வேக வீதிகள் பல வருடங்கள் பிற்போடப்பட்டன. எனினும் இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பித்தது யார் என்று நாட்டு மக்களுக்கு தெரியும். எதிர்கால சந்ததியினருக்காக நாம் ஆரம்பித்த வேலைத்திட்டங்களை வெளிநாடுகளுக்கு விற்றுள்ளனர். வேலை வாய்ப்பு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 வருடங்கள் ஆட்சியைக் கைப்பற்றி எஞ்சியிருக்கும் தேசிய சொத்துக்கள விற்பதற்கே இவர்கள் திட்டமிடுகின்றனர். இதனால் மீண்டும் வாக்கு கேட்பதற்கு இவர்களுக்கு உரிமை கிடையாது.
எமது அரசாங்கத்திலேயே கல்வித்துறை மேம்படுத்தப்பட்டது. கல்விக்கான கொள்கை திட்டங்கள் உருவாக்கப்பட்டன. வடக்கில் முழுமையான அபிவிருத்திகளை நாமே மேற்கொண்டோம். இந்த அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூலம் வாக்குகளை மாத்திரமே பெற்றுக் கொண்டது. சிறிதளவு கூட அபிவிருத்திகளை செய்யவில்லை. அங்குள்ள மக்கள் இம்முறை வாக்களிப்பை புறக்கணிக்க தீர்மானித்திருக்கிறார்கள். எனவே தான் நாமல் ராஜபக்ஷவை வடக்கிற்கு சென்று நேரடியாக அந்த மக்களின் நிலைமையை கண்டறியுமாறு தெரிவித்திருக்கின்றேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் 13 நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும் அந்த நிபந்தனைகள் எமக்கு இது வரையில் கிடைக்கவில்லை. தமிழ் பத்திரிகைகளில் வெளியாகியிருந்த செய்திகள் மூலமாகவே அறியக்கிடைத்தது. அவை எனக்கு கிடைக்கவும் இல்லை. அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் எனக்கு இல்லை. காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்தவொரு நிபந்தனைக்கும் கட்டுப்படுவதற்கு நாம் தயாராக இல்லை என்பதைத் தெளிவாகக் கூறுகின்றேன். எமக்கு நாடு என்பது மிக முக்கியமானது. அதனை பிளவடையச் செய்வதற்கு இடமளிக்க முடியாது. நாட்டின் தனித்துவ தன்மையை பாதுகாப்பதற்காக பாடுபடுவதற்கு நாம் தயாரா இருக்கின்றோம்.