பதவிக்காலம் நிறைவடைவதற்குள் ஒருவருக்கேனும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன் – ஜனாதிபதி
21 Oct,2019
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு சாதகமாக நீதி மன்ற தீர்ப்பு கிடைக்கப் பெற்றால் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஒருவருக்கேனும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
போதைப்பொருளிலிருந்து நாட்டின் இளைஞர் தலைமுறையை மீட்பதற்காக அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை வழங்குவதற்கு தீர்மானித்தபோதும் அதற்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டதுடன், அந்த வழக்குத் தீர்ப்புக்கு தலை சாய்க்க வேண்டியுள்ளது.
சிலபோது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவதற்கு சார்பாக அந்த வழக்குத் தீர்ப்பு கிடைக்கப்பெற்றால் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னர் இந்த நாட்டின் இளைஞர்களுக்காக ஒரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கேனும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்.
ஊடக சுதந்திரம் அதிகபட்சம் உறுதி செய்யப்பட்டிருந்த கடந்த யுகத்தில் அதிகம் விமர்சனங்களுக்கு உள்ளானவன் நான் தான் என்ற போதும், அந்த எந்தவொன்றிற்கும் தான் எதிர்ப்பை வெளியிடவில்லை. நாட்டின் இளைஞர்கள் ஊடக சுதந்திரத்தை அதிகளவு அனுபவித்து வருகின்றனர்.
இளைஞர்களை வலுவூட்டுவதற்காகவும் அவர்களுக்கான சலுகைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் தனது ஆட்சிக்காலத்தில் முக்கியமான பல பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இளைஞர்கள் அரசியலுக்கு வருவதாயின் அவர்கள் கல்விப் பின்புலத்தை கொண்டிருக்க வேண்டும் என்றும் முன்னுதாரணமான ஆளுமைகளாக இருக்க வேண்டும் என்றும்.
கற்றவர்கள் உள்ள நாட்டில் பிரச்சினைகள் குறைவடையும் என்பதுடன், அந்நாடு அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும். அவ்வாறான சூழ்நிலையில் அரச நிர்வாகமும் நல்லாட்சியாக காணப்படும் என்றும் அவர் கூறினார்