பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பின் சாம்பல் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்!
21 Oct,2019
பயங்கரவாதத்திற்கு எதிரான சர்வதேச அமைப்பான சர்வதேச நிதி நடவடிக்கை பணிக் குழுவின் (Financial action task force- FATF) சாம்பல் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் இலங்கையை சாம்பல் பட்டியலில் இருந்து நீக்க FATF முடிவு செய்தது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி எடுக்காமல் இலங்கை அரசு அமைதியாக இருப்பதாக குற்றம்சாட்டி அதனை சாம்பல் பட்டியலில் சேர்த்து கண்காணிப்புக்கு உட்படுத்த நிதி நடவடிக்கை பணிக் குழு முடிவெடுத்து செயற்படுத்தியது.
இதனை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அர்ஜெண்டினாவில் நடந்த கூட்டத்தில் பயங்கரவாதத்திற்க எதிரான இலங்கை அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை என்பதால் இலங்கை சாம்பல் பட்டியலில் தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நிதி நடவடிக்கை பணிக் குழுவின் கூட்டம் கடந்த 5 நாட்களாக பிரான்ஸ் நாட்டின் தலைநகரம் பாரிஸ் நகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் இறுதி நாளில் இலங்கையை சாம்பல் பட்டியலிலிருந்து நீக்க பணிக் குழு முடிவு செய்தது.
மேலும் இலங்கை, எத்தியோப்பியா மற்றும் துனிசியா ஆகிய நாடுகள் சர்வதேச நிதி நடவடிக்கை குழு சுட்டிக்காட்டிய நிதி மோசடி மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவி உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டுள்ளதாக FATF பாராட்டியுள்ளது.
இதே வேளை பயங்கரவாத அமைப்புகளுக்கான நிதியுதவியை தடுக்கத் தவறியதால் பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
நிதி நடவடிக்கை பணிக் குழுவானது சர்வதேச நிதி அமைப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் நிதி மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட குற்றங்களை கண்காணிக்கும் நோக்கில் 1989 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.