இலங்கை அதிபர் தேர்தலில் களமிறங்கும் மஹிந்த ராஜபக்ஷவின் இன்னொரு சகோதரர்
05 Oct,2019
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரும், முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இலங்கை ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை குடியுரிமை உள்ளவராக நீதிமன்றம் ஏற்றுக்கொள்வது குறித்த தீர்ப்பு இன்று மாலை வெளிவரவுள்ள நிலையில் இது நிகழ்ந்துள்ளது.
சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் நோக்குடன், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று அவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் அந்த கூட்டமைப்பின் செயலாளர் சுமித் விஜேசிங்க, சமல் ராஜபக்ஷவிற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், நாடாளுமன்ற சபாநாயகராக கடமையாற்றிய அவர், தற்போது ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அங்கத்துவராக விளங்குகின்ற அவர், தற்போது நாட்டில் காணப்படுகின்ற பரபரப்பு சூழ்நிலைக்கு மத்தியிலேயே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை குடியுரிமை செல்லாது என அறிவிக்கப்படலாம் என்பதால் முன்னெச்சரியாகையாக் சமல் மனு தாக்கல் செய்துள்ளதாக கருதப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் தீர்ப்பு இன்று மாலை வழங்கப்படவுள்ள பின்னணியிலேயே, அவரது மூத்த சகோதரர் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமை தொடர்பான வழக்கு விசாரணைகள் தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
இந்த வழக்கின் தீர்ப்பை இன்று மாலை 6 மணிக்கு பின்னர் வழங்கவுள்ளதாக நீதிமன்றம் இன்று நண்பகல் அறிவித்திருந்தது.
யார் இந்த சமல் ராஜபக்ஷ?
1942ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி பிறந்த சமல் ராஜபக்ஷ, காலி ரிச்மட் கல்லூரியில் கல்வியை தொடர்ந்துள்ளார்.
1964ஆம் ஆண்டு போலீஸ் சேவையில் இணைந்துக்கொண்ட சமல் ராஜபக்ஷ, 8 வருடங்கள் காவல் துறையில் கடமையாற்றியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அரச வணிக கூட்டுதாபனத்தில் பொது முகாமையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இவ்வாறு அரச சேவையில் பணியாற்றிய சமல் ராஜபக்ஷ, செயற்பாட்டு அரசியலில் 1985ஆம் ஆண்டு பிரவேசித்துள்ளார்.
1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் ஊடாக நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்ற சமல் ராஜபக்ஷ, இப்போதுவரை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வருகின்றார்.
பிரதி அமைச்சர், அமைச்சர் என கடமையாற்றி வந்த சமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் 2010ஆம் ஆண்டு சபாநாயகராகவும் கடமையாற்றியிருந்தார்.