பிளவுபடாத நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு – சஜித் அறிவிப்பு
27 Sep,2019
பிளவுபடாத நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு – சஜித் அறிவிப்பு
பிளவுபடாத ஒன்றிணைந்த நாட்டுக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தவுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியில் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பின் பின்னர் சிறிகொத்தாவில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் கூறுகையில், “ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை குறித்தோ அல்லது பிரதமர் குறித்தோ இன்று வாக்கெடுப்பு நடக்கவில்லை. இது ஜனாதிபதித் தேர்தல். இதில் ஜனாதிபதி ஆசனத்தை பிடிக்கவே நாம் ஒன்றிணைந்து பயணிக்கின்றோம். இதில் கொள்கை உள்ளதே தவிர உடன்படிக்கை இல்லை.
2015ஆம் ஆண்டு எங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. அதேபோன்று இம்முறையும் எமக்கு ஆதரவு கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.
அதேபோல் ஜனநாயக ரீதியில் பயணிக்கும் அனைவருக்கும் எம்முடன் இணைந்து பயணிக்க அழைப்பு விடுக்கின்றேன். பொதுக் கொள்கையில் நாட்டினை கட்டியெழுப்ப வேண்டிய நோக்கத்தில் முன்னகர்கின்றேன். ஆனால் இதில் எவருடனும் உடன்படிக்கை செய்துகொள்ள நான் தயாரில்லை. சர்வதேச உடன்படிக்கைகோ உள்நாட்டு உடன்படிகைக்கோ நான் அடிபணியவும் மாட்டேன்.
வடக்கு கிழக்கில் மக்கள் 30 ஆண்டுகளாக யுத்தத்தில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விசேட கவனம் செலுத்தப்படும். அதேபோல் இந்த நாட்டில் கஷ்டப்படும் சகலருக்கும் நியாயமான வாழ்க்கையை உருவாக்கிக்கொடுக்கவே நான் கவனம் செலுத்துவேன்” என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்