ஆயுதக் கப்பல் வழக்கிலிருந்து விடுதலையானார் கோட்டாபய ராஜபக்ஷ
24 Sep,2019
ஆயுதக் கப்பல் வழக்கிலிருந்து விடுதலையானார் கோட்டாபய ராஜபக்ஷ
எவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு விசாரணைகளிலிருந்து பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, கொழும்பு பிரதம நீதவான் இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.
இலங்கையின் தென் பகுதியிலுள்ள காலி துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் எவன்கார்ட் மெரிடைம் நிறுவனத்திற்கு மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையொன்றை நடத்தி செல்ல அனுமதி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 11.4 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக குற்றஞ்சுமத்தி வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
இந்த வழக்கு விசாரணைகளிலிருந்து பாதுகாப்புத் துறை முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியிருந்த தீர்ப்பின் ஆவணங்கள் நீதவானிடம் கையளிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே கொழும்பு பிரதம நீதவான் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.
எவன்கார்ட் சம்பவம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இதற்கு முன்னர் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 12ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீதான விசாரணைகள் கொழும்பு மேலதிக நீதவான் தனுஜா ஜயதுங்க முன்னிலையில் கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவின் பிரதி நீதிமன்றத்தில் அன்றைய தினம் சமர்ப்பிக்கப்படாமையினால், வழக்கு விசாரணைகள் இன்று வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற ஆவணங்கள் பிரதம நீதவான் முன்னிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்தும் விடுதலை செய்யப்பட்டனர்.
அத்துடன், இந்த வழக்கு விசாரணைகளுக்கு சமூகமளிக்காதிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்னவிற்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளமையினால், தமயந்தி ஜயரத்ன மீதான பிடியாணை உத்தரவை மீளப் பெறுமாறு சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், சந்தேகநபரை நீதிமன்றத்தின் முன்னிலைக்கு சமூகமளித்து, பிடியாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கடற்படை முன்னாள் தளபதிகளான சோமதிலக்க திஸாநாயக்க, ஜயநாத் கொலம்பகே, ஜயந்த பெரேரா, எவன்கார்ட் நிறுவனத்தின் நிஷங்க சேனாதிபதி, பாலித்த பியசிறி பெர்ணான்டோ, கருணாரத்ன பண்டார ஆகியோரே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.