அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவேன் – கோட்டா
23 Sep,2019
நாட்டில் அனைத்து இன மக்களும் அச்சமின்றியும், சம உரிமையுடனும் வாழக்கூடிய சூழ்நிலையை தான் ஆட்சிக்கு வந்தால் உருவாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சிச் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புத்தளத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.
அந்த வகையில் முதலாவது சமய நிகழ்வாக சிலாபம் முன்னேஸ்வரம், ஸ்ரீ முன்னை நாதஸ்சுவாமி ஆலயத்திற்குச் சென்ற இவர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதனையடுத்து ஆராச்சிக்கட்டு எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் புத்தளம் மாவட்ட பிரதான காரியலாயத்தை திறந்து வைத்தனர்.
இதனையடுத்து கல்பிட்டி தலவில் அன்னமாள் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட திருப்பலி பூஜையிலும் கலந்துகொண்டனர்.
பின்னர் மதுரங்குளி கடையாமோட்டை உமர் ஜூம்ஆ மஸ்ஜித்தில் நடைபெற்ற விஷேட துஆப் பிரத்தனையிலும் கலந்துகொண்டனர்.
இதன்போது உரையாற்றுகையிலேயே, தன்னைப் பற்றிய தவறான சித்தரிப்புக்கள் சமூகத்தில் பரப்பப்பட்டுள்ளதாகவும் தான் ஆட்சிக்கு வந்தால் அச்சமின்றி வாழும் சூழ்நிலையை உருவாக்குவதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், “என்னைப் பற்றிய தவறான சித்தரிப்புக்கள் சிறுபான்மை மக்களிடம் பரப்பிவிடப்பட்டுள்ளன. இது ஒன்றும் இரகசியமானது அல்ல.
அரசியல் காற்புணர்ச்சிக் காரணமாக, என்மீதான ஒரு அச்சத்தை சிலர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளார்கள்.
2015 ஆம் ஆண்டும் இந்த அச்சத்தின் காரணத்தினாலேயே மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் தோற்கடித்தார்கள்.
ஆனால், உங்கள் அனைவருக்கும் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நன்றாகத் தெரிந்திருக்கும். பொருளாதாரம் முற்றாக சரிவடைந்துவிட்டது. வியாபாரிகளுக்கு வியாபாரம் செய்யும் சூழ்நிலை இல்லாது போயுள்ளது.
கடந்த காலங்களில் இவ்வாறான சவால்கள் நாட்டில் இருக்கவில்லை. நாம் அனைத்து இன மக்களுக்குமான சேவையைத்தான் செய்திருந்தோம்.
இதேபோன்று, எதிர்காலத்திலும் எம்மால் மேற்கொள்ள முடியும். அனைத்து மக்களும் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை நாம் எமது ஆட்சியில் நிச்சயமாக ஏற்படுத்துவோம்.
அச்சம், சந்தேகமற்ற சமூகமொன்றை உருவாக்குவோம். இதுதான் மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள்.
எனவே, பொய் பிரசாரங்களை மக்கள் நம்பக்கூடாது என்று நான் இவ்வேளையில் கேட்டுக்கொள்கிறேன்.
நான் எந்தவொரு இனத்துக்கும் எதிரானவன் அல்ல. கொழும்பில், நான் சிறுபான்மையின மக்களுக்காகத்தான் பல்வேறு சேவைகளை செய்துள்ளேன்.
இந்த நிலையில்தான் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனை மக்கள் நம்பாது, எம்முடன் கைக்கோர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்தார்