இலங்கையில் இன்னொரு தாக்குதலா? சதி பற்றி ராணுவம் ?
19 Sep,2019
ஈஸ்டர் தாக்குதலை போன்றதொரு தாக்குதலை நடத்த ராணுவத்துடன் இணைந்து சிலர் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து வெளியிடுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான போலிச் செய்திகளால் இலங்கை ராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், போலிச் செய்திகளால் நாட்டு மக்களின் மத்தியில் பெரும் அச்சம் தோன்றியுள்ளதாகவும் ராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான போலி தகவல்களை வெளியிட்ட நபர்கள் தொடர்பாக இலங்கை ராணுவம் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இணையத்தளத்தின் ஊடாகவும், இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்களின் ஊடாகவும் இலங்கை ராணுவம் தொடர்பான போலிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து குறிப்பிட்டுள்ளார்.
சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு
இலங்கையில் கடந்த ஈஸ்டர் தினத்தன்று (ஏப்ரல் 21) தற்கொலைக் குண்டுதாக்குதல்களை நடந்திய சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு தொகை ஆயுதங்களை இன்று (புதன்கிழமை) போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்தத் தகவலை போலீஸ் பேச்சாளர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தின் துறைமுக வீதியிலுள்ள வளவு ஒன்றினுள் மேற்படி ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
அரசு புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அம்பாறை போலீஸார் இந்த ஆயுதங்களைக் கைப்பற்றியதாகப் புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.
ரி56 ரக துப்பாக்கி - 01, துப்பாக்கி ரவைகள் - 23, டெட்டனேட்டர் குச்சி - 07, யூரியா - 02 கிலோகிராம் உள்ளிட்ட பல பொருட்கள், இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
ஏற்கனவே பாலமுனை பகுதியில் சஹ்ரான் குழுவினரின் 35 லட்சம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பாலமுனை - ஹுசைனியா நகரிலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த மே மாதம் 31ஆம் தேதி, பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, 35 லட்சம் ரூபாய் பணமும், நகைகள் சிலவும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதேவேளை, பாலமுனையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிருந்தே சஹ்ரான் குழுவினர் பயன்படுத்தியதாக நம்பப்படும் மடிக்கணிணி ஒன்றினையும் சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியிருந்தனர்.