சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை – வாசுதேவ நாணயக்கார
11 Sep,2019
கொவிகம சாதியைச் சேர்ந்தவரால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பிரேமதாச ஜனாதிபதியாக வந்ததன் மூலமாக நியதியொன்று தகர்க்கப்பட்டபோதிலும், தலைமைத்துவ வரிசை என்று வரும்போது சிங்கள — பௌத்த — கொவிகம முக்கியஸ்தர்கள் முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படும் போக்கு இன்னமும் நிலைத்திருக்கிறது.
பிரேமதாச ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி நிலவிய காலத்து சூழ்நிலை அவசியப்படுத்திய தேவையின் காரணமாகவே ஜனாதிபதியாக வந்தார். என்றாலும் கூட அன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்த உயர்சாதி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள்.
தற்போது சிங்கள — பௌத்த — கொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக வெற்றிபெற முடியும். ஜனாதிபதியாக சிங்கள — பௌத்த — கொவிகம மாத்திரமே தெரிவுசெயயப்பட முடியும் என்ற மனநிலையே நாட்டில் நிலவுகிறது.
ஜனாதிபதி பிரேமதாசவின் நியமனத்துடன் நாம் நிப்பிரபுத்துவத்தில் இருந்து வெளியே வந்தோம். அதை மேலும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயவேண்டும்.
வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் சாதிமுறைமை உறுதியானதாகவே இருக்கிறது.
இன்று சஜித் பிரேமதாச முகங்கொடுக்கின்ற பிரச்சினை போன்றே அன்று அவரின் தந்தையார் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சித்ததை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உயர்மட்டத்தவரும் உயர்சாதியினர் என்று சொல்லப்படுகின்றவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள்.
எமக்கு சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை, சகல இனங்களையும் சேர்ந்த மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய இலங்கைத் தலைவரே தேவை.
எவ்வாறெனினும், சிங்கள பௌத்தர்களே நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால், தேர்தல் ஒன்றில் சிங்கள பௌத்தர்களின் முன்னிபந்தனை இல்லாமல் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது கஷ்டமான காரியமேயாகும்.
எனவே, சிங்கள பௌத்த சக்திகளின் செல்வாக்கு இல்லாமல், முழு நாட்டினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் ஒருவரைக் கொண்டுவருவது கடினம்’ ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்