இந்து மயானத்திலிருந்து பயங்கரவாதியின் உடற்பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டன
03 Sep,2019
மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியின் உடற்பாகங்கள் தோண்டியெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மீது காத்தான்குடியை சேர்ந்த பயங்கரவாதியான மொஹமட் ஆஸாத் நடாத்திய குண்டுத்தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 75க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த நிலையில் குண்டுத்தாக்குதலை நடாத்திய சூத்திரதாரிய் உடற்பாகங்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததுடன் விசாரணைகளை தொடர்ந்து குறித்த உடற்பாகங்களை புதைப்பதற்கு நீதிமன்றம் கட்டளை அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் குறித்த உடற்பாகங்கள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் கடந்த 26 ஆம் திகதி புதைக்கப்பட்டதை தொடர்ந்து 27ஆம் திகதி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் குறித்த உடற்பாகங்களை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் ஆகியோர் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக கோரிக்கையினை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பில் அரசசட்டத்தரணி யாதவன் ஊடாக மனுத்தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த சடலத்தினை அங்கிருந்து அகற்றுவதற்கான உத்தரவினை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு அமைய இன்று மாலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் குறித்த உடற்பாகங்கள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தோண்டியெடுக்கப்பட்டன.
குறித்த உடற்பாகங்கள் தோண்டியெடுக்கும் பகுதிக்கு மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் கே.வாசுதேவன்,பிரதேச கிராம சேவையாளர் உட்பட உயர் பொலிஸ் உயர் அதிகாரிகளும் ஆஜராகியிருந்தனர்.
குறித்த உடற்பாகங்களை புதைப்பற்கு பொருத்தமான இடமொன்றை தெரிவுசெய்யும் வரையில் மீண்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்க பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.