இலங்கையின் உள்ளக விடயங்களில் தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை – ஜி.எல்.பீரிஸ்
27 Aug,2019
இராணுவத் தளபதி நியமனம் உள்ளிட்ட, இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லையென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இலங்கை குடியுரிமை கொண்டவராக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகைமையைக் கொண்டுள்ளார்.
அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள குடியுரிமை துறந்தவர்களின் பட்டியலில் அவரின் பெயர் இல்லை என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
அந்தப் பட்டியலில் இடம்பெற வேண்டியது கட்டாயமில்லை. அதனை அமெரிக்க தூதரகமே உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை பிரஜையாக அவர் இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றுள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கோட்டாபய ராஜபக்ஷ மகிழ்ச்சியாக இல்லை. அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதும் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து புதிய விசாரணைகளை நடத்துவார்.
மேலும் இராணுவத் தளபதியாக லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை உள்ளிட்ட இலங்கையின் உள்நாட்டு விடயங்களில் தலையிடும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.