சவேந்திர சில்வாவின் நியமனத்தில் அமெரிக்கா ஏன் வேதனைப்பட வேண்டும் – மஹிந்த அணி
22 Aug,2019
சவேந்திர சில்வா போன்ற ஒரு போர்வீரனை இராணுவத் தளபதியாக நியமிக்கும்போது, அமெரிக்கா ஏன் வேதனைப்பட வேண்டும் என மஹிந்த அணி கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு பல்வேறு சர்வதேச நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில் இதுகுறித்து கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாட்டு மக்களினது தேவையின் அடிப்படையில் அதிகாரிகளை நியமிக்கும்போது, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பிற நாடுகளின் தெரிவுகளை கவனத்தில் கொள்ள முடியாது.
இலங்கை இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, நாட்டை நாசப்படுத்திய 30 ஆண்டு கால போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, மகத்தான பங்களிப்பை வழங்கினார்.
எங்களுக்கு ஒரு புதிய இராணுவத் தளபதி கிடைத்தது, புலம்பெயர் தமிழர்கள், சுமந்திரன் மற்றும் அமெரிக்காவுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கைகயை சீர்குலைக்கும் ‘ரிமோட் கொன்ட்ரோல்’ மேற்குலகின் கைகளில் உள்ளது, எமது மக்கள் அதை நன்கு அறிவார்கள்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்