தேர்தல் காலத்தில் சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க நடவடிக்கை
19 Aug,2019
தேர்தல் நடவடிக்கைகளுக்கு சமூக வலைத்தளங்களால் ஏற்படுகின்ற அழுத்தங்களைக் கட்டுப்படுத்துவதற்கான விசேட திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பெப்ரல் (PAFFREL) அமைப்பு உத்தேசித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தேர்தல் காலத்தில் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மேற்பார்வை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலப்பகுதியில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற வதந்திகள் மற்றும் தேர்தலுக்கு இடையூறாக அமையும் பதிவுகளை நீக்குமாறு, சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அறிவிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நீதியானதும், நியாயமானதுமான தேர்தலொன்றை நடத்தும் நோக்கிலேயே, இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்