கோத்தபய ராஜபக்சே உயிருக்கு அச்சுறுத்தல் - சிறிசேனாவிடம் முறையிட்டார்
19 Aug,2019
இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில், முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது கட்சி சார்பில் தன்னுடைய சகோதரர் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளார். ராஜபக்சே அதிபராக இருந்தபோது, இலங்கை அரசின் பாதுகாப்பு செயலாளராக கோத்தபய ராஜபக்சே பணியாற்றினார். அவர், விடுதலைப்புலிகளை தோற்கடித்ததில் முக்கிய பங்கு வகித்தார். அதற்காக அவர் சட்டத்துக்கு புறம்பான வழிமுறைகளை கையாண்டதாகவும், தமிழர்கள் படுகொலை மற்றும் காணாமல் போனதற்கு காரணமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறியுள்ளார். அதிபர் சிறிசேனாவை சந்தித்து இதுகுறித்து முறையிட்டார்.
வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பயங்கரவாத குழு, தன்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தனது உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். இதற்காக தூரத்தில் இருந்தபடி குறிபார்த்து சுடத்தக்க துப்பாக்கியை பயன்படுத்த முயற்சி நடந்து வருவதாகவும், மலேசியாவில் இருந்து விசேஷ துப்பாக்கி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோத்தபய கேட்டுக்கொண்டார்.
மேலும், அவர் நிருபர்களிடம் கூறுகையில், “என்னை மட்டுமின்றி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் விடுதலைப்புலி தளபதியும், தமிழ் அரசியல்வாதியுமான கருணா ஆகியோரை கொல்லவும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது” என்றார்.
கோத்தபய புகார் குறித்து விசாரணை நடத்துமாறு பயங்கரவாத புலனாய்வு போலீஸ் இயக்குனருக்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
கோத்தபய ராஜபக்சே, தனது பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்கள் குழுவை நியமித்துள்ளார். சமீபத்தில், கண்டியில் புத்தரின் புனித பல் வைக்கப்பட்டுள்ள ஆலயத்துக்கு கோத்தபய ராஜபக்சே சென்றபோது, பொதுமக்கள் யாரும் அவரை நெருங்க விடாமல் பாதுகாவலர்கள் தடுத்தனர்.