கோட்டா நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே செயற்படுவார் – கம்மன்பில
17 Aug,2019
கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகவே செயற்படுவார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் குறித்து கருத்து வெளியிடும் போதே மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற ஒரு கட்சி இப்போது இல்லை. அந்த இடத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது.
பிரதான கட்சியாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியே உள்ளது. இதனுடன் கூட்டணி அமைக்க ஏனைய கட்சிகளுக்கு இடமுண்டு.
ஆனால் இதில் ராஜபக்ஷ கொள்கையுடன் இணையக்கூடிய நபர்களே இருக்க வேண்டும். மக்கள் இன்று ராஜபக்ஷ யுகம் வேண்டும் என்று கேட்கின்றனர்.
அதனாலேயே கோத்தாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க தீர்மானம் எடுத்துள்ளோம். இதுவரை காலமாக ஜனாதிபதியாக இருந்தவர்கள் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளனரா?
மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தார். கோத்தாபய ராஜபக்ஷ பேசிக்கொண்டு காலத்தை கடத்துபவர் அல்ல. அவர் சொல்வதை செய்து காட்டியவர்.
உலகில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளை இரண்டரை ஆண்டுகளில் இல்லாதொழித்தார். அவர் போன்ற ஒருவர் மூலமாகவே நாட்டினை மீட்டெடுக்கவும் முடியும்.
அடுத்த ஜனாதிபதிக்கும் இப்போதுள்ள ஜனாதிபதிக்குள்ள சகல அதிகாரங்களும் இருக்கும். கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவே செயற்படுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.