இலங்கையில் இராணுவத் தளம் அமைக்கப்பட மாட்டாது
11 Aug,2019
அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள சோபா (இராணுவம் நிலை கொள்ளச் செய்யப்படும் ஒப்பந்தம்) ஊடாக வெளிநாட்டு இராணுவத் தளம் அமைக்கப்படமாட்டாது என்பதை நம்புவதற்கு நாட்டு மக்கள் தயாராகவில்லையென ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக அமெரிக்க இராணுவத்தின் படைத்தளம் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் அமைக்கப்படலாம் என்ற சந்தேகம் மக்களிடையே காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
அமெரிக்காவுடன் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே டக்ளஸ் தேவானந்தா எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
இராணுவம் நிலைகொள்ளச் செய்யும் ஒப்பந்தம்’ (Status Of Forces Agreement–SOFA) என்று இனங்காணப்படுகின்ற இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இலங்கையில் வெளிநாட்டுப் படைத்தளமொன்றுக்கு வழிவகுக்கும் சாத்தியம் காணப்படுவதாக இலங்கையர்கள் மத்தியில் அச்சம் காணப்படுகின்றது.
எனினும், அவ்வாறான படைத்தளமொன்றை அமைக்கும் நோக்கம் எதுவும் தமக்கு இல்லையென அமெரிக்கா அறிவித்துள்ளது.
இருந்தபோதும் இராணுவப் படைத்தளமொன்று அமைப்பதற்கான சூழ்நிலை இல்லையென கூறும் கருத்தை நம்பும் நிலையில் மக்கள் இல்லை. தென் பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதால், அமெரிக்க இராணுவப் படைத்தளத்தினை வடக்கு, கிழக்கு பகுதிகளில் அமைக்கக்கூடும் என்ற சந்தேகம் காணப்படுகிறது. இலங்கையில் அதிகளவில் காணப்படுகின்ற பிறநாடுகளின் பிரசன்னங்கள் காரணமாகவும், அமெரிக்காவுக்கான ஏனைய நாடுகளுடனான இராணுவமயத் தேவைகள் காரணமாகவும் இலங்கையில் படைத்தளமொன்றை அமைப்பதில் அதிக பயன்கள் அமெரிக்கா அடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
அமெரிக்காவின் தேவையை இந்த நாட்டில் வலுப்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்கா மேற்கொள்கின்ற நடவடிக்கைளின்போது அதற்கு வழிவிடவும், தென்பகுதியில் அதற்கான எதிர்ப்பினைச் சமாளிப்பதற்குமாக இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் இதற்கெனப் பலியாக்கப்படலாம் என்ற சந்தேகமே எமது மக்களிடையே காணப்படுகின்றது.
இதற்கான அறிகுறிகள் இப்போது தென்பட ஆரம்பித்துள்ளன என்றே கருத வேண்டியுள்ளது. கடந்த மாதம் 05ஆம் திகதி அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் இருவர் யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் காணிகளைப் பார்வையிட்டுள்ளதுடன், கடற்கரைப் பகுதியினையும் கண்காணித்துள்ளனர்.
இவர்களது இந்த விஜயம் பற்றி வடக்கு மாகாண ஆளுநரிடம் கேட்டபோது,
இது பற்றி தனக்குத் தெரியாது என்றும், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சே இதனை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்