மதுபானம் அருந்தி 10 க்கும் மேற்பட்டோர் பலி: பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்
06 Aug,2019
மீரிகம - பல்லேவெல பிரதேசத்தில் சட்ட விரோத மதுபானத்தை அருந்தி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையத்தில் விநியோகிக்கப்பட்ட மதுபானத்தை அருந்திய நிலையிலேயே இவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த சட்டவிரோத மதுப்பானத்தை அருந்திய சிலர் வாந்தி மற்றும் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மீரிகம - பல்லேவெல மற்றும் வெளிப் பிரதேசங்களை சேர்ந்த சிலரும் குறித்த சட்டவிரோத மதுப்பானத்தை அருந்தி சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று திங்கட்கிழமை வரை சுமார்10 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு குறித்த சரியான எண்ணிக்கையை கூற இயலாது என பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர மேலும் தெளிவுபடுத்துகையில்,
பல்லேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட மதுபானத்தை அருந்திய பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறு சட்ட விரோதமாக மதுபானத்தை தயாரித்து அதனை வியாபாரம் செய்து வந்த பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எவ்வாறிருப்பினும் குறித்த பிரதேச மக்கள் இந்த விடயம் குறித்து முறையிட்டு வருகின்றனர்.அத்தோடு சில ஊடகங்களும் இதனை வெளிப்படுத்தியிருந்தன. ஆனால் பல்லேவெல பொலிஸார் இவ்வாறானதொரு சட்ட விரோத மதுபான உற்பத்தி அந்த பிரதேசத்தில் இடம்பெறவில்லை என்றே தெரிவித்து வந்தனர்.
பல்லேவெல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இவ்வாறான பொறுப்பற்ற செயல் மற்றும் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் பொலிஸ் தலைமையகம் கவனம் செலுத்தியது. அதற்கிணங்க அவரை பல்லேவெல பொலிஸ் நிலையத்திலிருந்து இடமாற்ற பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.
அத்தோடு சட்ட விரோத மதுபான உற்பத்தி மற்றும் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களுக்கு எதிராக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நடவடிக்கை எடுக்காமை குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த சந்தேகநபர்களை கைது செய்வதற்கு அவரால் ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா? இந்த சட்ட விரோத மதுபான உற்பத்தி நிலையத்தை அகற்றுவதற்கு ஏதேனும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா ? என்பது தொடர்பிலும் பொலிஸ் தலைமையகம் விஷேட விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இதுமாத்திரமன்றி இந்த குற்றங்களை இவர் திட்டமிட்டு மறைத்துள்ளாரா? என்பது தொடர்பில் ஆராயுமாறு பொலிஸ் சட்ட பிரிவினால் கோரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பல்லேவெல பொலிஸாரால் விசாரணைகள் முன் னெடுக்க படவில்லை. மாறாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் , கம்பஹா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.