தமிழ் அரசியல் கைதியின் குடும்பத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய நாமல்
01 Aug,2019
தன்னுடன் சிறையில் இருந்த சக கைதியின் குடும்பத்தினருக்கு கொடுத்த வாக்குறுதியை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிறைவேற்றியுள்ளார்.
பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாமல் ராஜபக்சவுடன், கிளிநொச்சி – இரணைமடு பகுதியை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியொருவரும் இருந்துள்ளார்.
இதன்போது, தன்னுடைய குடும்பத்தினருக்கு நிரந்தர வீட்டு வசதிகள் எவையும் இல்லை என்றும், சிறையிலிருந்து சென்றால் தமது குடும்பத்திற்கு வீட்டு வசதியினை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் கோரியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி, பன்னங்கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்பின், சிறையில் தனக்கு அறிமுகமாகிய நபரின் வீட்டிற்குச் சென்று அவர்களுடன் உரையாடியதுடன், அவர்களுக்கான வீட்டு வசதியியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
எதிர்வரும் சில நாட்களில் இந்த வீட்டு வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு வீடு கையளிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில் புது வீட்டை கட்டி முடித்த நிலையில் அதனை குறித்த தமிழ் அரசியல் கைதியின் குடும்பத்திடம் கையளித்து தாம் வழங்கிய உறுதியை நிலைவேற்றியுள்ளார் நாமல்.
இது தொடர்பில் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார். அதில்,
நாம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில் சிலரை சந்திக்கின்றோம். அவ்வாறே நான் சௌரிமுத்து லோகநாதனையும் சந்தித்தேன்.
எங்கள் சந்திப்பு எதிர்பாராததாக இருந்த போதிலும், அவரை சந்தித்ததிலும் மற்றும் கிளிநொச்சியில் அவருக்கான புதிய வீட்டை கட்டுவதற்கு உதவ வாய்ப்பு கிடைத்ததிலும் மகிழ்ச்சியடைகிறேன்.
அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.