பொதுவேட்பாளராகக் கரு ஜயசூரிய களமிறங்க ரணில் பச்சைக்கொடி?
01 Aug,2019
ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற சர்ச்சை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முட்டிமோதுகையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைத் தானே முன்னின்று ஒழிப்பார் என்ற உறுதிப்பாட்டுடன் அந்தப் பணிக்கான பொது வேட்பாளராகத் தற்போதைய சபாநாயகர் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்பீட வட்டாரங்களில் ஓர் பொது இணக்க நிலை ஏற்பட்டிப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.
இந்த சமரசத் திட்டத்துக்குச் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பச்சை சமிக்ஞையும் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவா அல்லது சஜித் பிரேமதாஸவா அல்லது கரு ஜயசூரியவா என்ற இழுபறி நீடிக்கும் நிலையில் – இந்தச் சர்சையை முடிவுக்குக் கொண்டுவரும் இணக்க ஏற்பாடாக கரு ஜயசூரியவின் பெயர் பிரேரிக்கப் பட்டிருக்கின் றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையைக் குறுகிய காலத்தில் ஒழித்தல் என்ற கோட்பாட்டுடன் அதற்கான பொது வேட்பாளராகக் கரு ஜயசூரியவை இறக்குவது குறித்தே கட்சியின் உயர்மட்டத்தில் ஆராயப்படுகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கும்போது நாட்டின் பிரதமருக்கே அதிக அதிகாரங்கள் கிட்டும். அப்படியான சூழலில் பிரதமராகப் பதவியில் இருப்பது நாட்டின் அரச தலைவர் பதவிக்கு ஒப்பானது என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதைக் கவனத்தில் எடுத்தே இந்தத் திட்டத்துக்குப் பிரதமர் ரணில் விக்கிரசிங்க பச்சை சமிக்ஞை காட்டியிருக்கின்றார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரு ஜயசூரிய ஒரு வாக்குறுதியை அளிப்பாராயின் அரசியல் நிலைப்பாட்டுக்காக அதை அவர் மாற்றமாட்டார் என்ற பொது அபிப்பிராயம் பரவலாக இருப்பதாலும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பொது வேட்பாளராக கரு ஜயசூரிய நிறுத்தப்படுவதற்கு சாதகமான நிலை கட்சிக்குள் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுடன் எதிர்வரும் 5ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டவுடன் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்றுத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான கரு ஜயசூரிய பொது வேட்பாளராகக் களமிறக்கப்படவுள்ளார் என்ற செய்தி கசிந்துள்ளது