சிறுபான்மையினரை ஏமாற்றுகிறார் ரணில்..!
30 Jul,2019
"கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான முஸ்லிம் தரப்பினரின் நிலைப்பாடு, நிபந்தனை இன்று மருதமுனைக்கான ஒரு புதிய பிரதேச செயலகத்தை உடன் பெற்றுக் கொள்வதாக இருக்கின்றது. இதற்கு நற்பிட்டிமுனை, பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களை உள்வாங்குவதென்ற திட்டத்தையும் வகுத்திருக்கின்றார்கள்"
வடக்கு ,தெற்கு, மலையகம் சார்ந்த அரசியல் வாதிகளின் கவனம் முற்றுமுழுதாக கிழக்கை நோக்கி திரும்பி இருக்கின்றது. அத்தகையதோர் நிலையில் ஆள் மாறி ஆள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றார்கள்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் உயர்த்தும் விடயம் தாமதமாவதால் அது பற்றிய கவன ஈர்ப்பே அதற்கான காரணமாக அமைகின்றது. சிலர் அதன் நியாயத்தன்மையை உணர்ந்து கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள்.
சிலர் அதை வைத்தே அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு சிறுபான்மை சமூகத்தின் அபிலாஷைகளை இன்னுமொரு சமூகம் எதிர்க்கின்ற, முரண்பட்ட நிலைமைகளே கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொடர்கின்றது.
யதார்த்த பூர்வமான வரலாற்றுக்கும் அரசியல் ரீதியான வரலாற்றுக்கும் இடையே வேறுபாடு காணப்படவே செய்கின்றது. திட்டமிட்டு திணிக்கின்ற வரலாற்றுக்கும் அனுபவ ரீதியான வாழையடி வாழை வாய்மூலமாக வந்த வரலாற்றுக்கும் இடையே நிறையவே வித்தியாசம் இருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இருந்து காப்பாற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் அரசியல் கட்சிகளும் ஒருமித்தே இணைந்து ஆதரவு அளித்தமை அனைவரும் அறிந்ததே. ஆனால், இரு தரப்பினரும் இம்முறை திரைமறைவில் நிபந்தனைகளுடனே ஆதரவு அளித்துள்ளனர் என்பது தற்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் சம்பந்தமாகவே இரு தரப்பினரும் தங்கள் நியாயங்களை முன்வைத்து நிபந்தனை விதித்துள்ளனர். எனினும் இரு தரப்பிற்கும் முரண்பாடான நிலைப்பாட்டிற்கு வாக்கு கொடுத்தது தற்போது பெரும் சிக்கலான ஒரு நிலைமையைத் தோற்றுவித்துள்ளது.
இதில் இருதரப்பும் விட்டுக்கொடுக்க முடியாத நிலையினையே கடைப்பிடித்து வருகின்றன. அரசியலில் வாக்குக் கொடுப்பதும், பின்னர் அதை வாபஸ் பெறுவதும் சாதாரண விடயங்கள்தான்.
இங்கு கொடுத்த வாக்கானது அரசைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்ட சந்தர்ப்பவாத வாக்காகவே கருதவேண்டியுள்ளது. குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சிறுபான்மையினங்களான தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் ஏமாற்றப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
எது நியாயமான கோரிக்கை, எது நியாயமற்ற கோரிக்கை என்ற ஆய்வுக்கு அப்பால் நடுநிலை தன்மையுடன் நேர்மையாகச் செயற்பட வேண்டிய ரணில் முஸ்லிம், தமிழ் தரப்பில் தனது சுயநல அரசியல் காரணமாக பாரிய பிளவு ஒன்றுக்கு வித்திட்டுள்ளார். சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளார்.
இந்த விடயம் இரு தரப்பு ஆதரவையும் இழக்க வேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார். இன்றைய நாட்டு அரசியலில் எதிர்மறையான ஒரு திருப்புமுனையைக் கூட ஏற்படுத்தலாம்.
இந்த விடயத்தை வாக்குகளை எதிர்பார்த்து கடந்த 30 வருடங்களாக கிடப்பில் போட்டு பதவியேற்ற அரசுகளெல்லாமே குறிப்பாக தமிழ் தரப்பினரை அரசியல் அநாதைகளாக்கும் கைங்கரியத்தையே செய்து வந்துள்ளன.
அதில் தமிழ் தரப்பு அரசியல் கட்சிகளும் இவ்வளவு காலமும் பாராமுகமாக இருந்து வந்தது இன்று பாரதூரமான நிலையை எட்டியுள்ளது. முஸ்லிம் தரப்பினர் முற்று முழுதாக சமூகம் சார்ந்த செயற்பாடுகளை ஒன்றித்து தீவிரமாக முன்னெடுக்க, தமிழ் தரப்பினர் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததற்கு ஒப்பானது கல்முனை விவகாரம்.
இதைக் காலம் கடந்தும் அவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அரசியல் ஞானமும் இன்னமும் உதயமாகவில்லை. உணர்ந்திருந்தால் தமிழ் அரசியல் தரப்பினர் ஒன்றித்துச் செயற்படும் பக்குவத்தை சமூகம் சார்ந்து எடுத்திருப்பார்கள். உண்மையில் எடுத்திருக்க வேண்டும்.
கட்சி அரசியலும் தலைமைத்துவத்திற்கான அரசியலுமே செய்தார்களே தவிர , செய்து கொண்டிருக்கின்றார்களே தவிர தூர நோக்கு இழந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தமிழ் அரசியல் வாதிகளிடம் காணும் பொதுவான அரசியல் பண்பாக கட்சிகளிடையேயோ அல்லது கட்சித் தலைமைகளிடையேயோ ஒற்றுமை என்பது ஒவ்வாமையாகவே இருந்து வருகின்றது.
ஒவ்வொரு தமிழ்க் கட்சித் தலைவர்களும் தான்தான் தமிழ் மக்களுக்கான தலைவர் என்ற மிகைப்படுத்தப்பட்ட எண்ணத்திலேயே ஊறியவர்களாகக் காணப்படுகின்றார்கள். ஆனால், ஒற்றுமை என்ற பலமான விடயத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்பவர்களாகவும் மற்றையவர்களையும் ஒதுக்கிவிடுபவர்களுமாகவே காணப்படுகின்றார்கள். இதன் பலாபலனாக சிங்கள பேரினவாதமும் சகோதர சமூகமும் எம்மை ஒதுக்கிக் கொண்டிருக்கின்றன.
உச்சிமீது இடி விழுந்தாலும் சௌகரியமாக தூங்கினால் போதும் என்ற மனப்பாங்குதான் பரவலாகக் காணப்படுகின்றது. அதனால்தான் இன்று பொதுமக்களே வீதியில் இறங்கி தங்களுக்கான கோரிக்கைகளை வென்றெடுக்க தைரியமாக போராடி வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குப் பின்னால் நின்று தங்கள் கட்சிகளை விளம்பரப்படுத்திக் கொள்ளவே சில தமிழ் அரசியல் கட்சிகள் முனைகின்றன.
மத குருமார் ஒன்றிணைந்து சுதந்திரமாக மேற்கொண்ட அரசியல் கலப்பற்ற கல்முனை உண்ணாவிரதப் போராட்டமும் அரசியல்வாதிகள் புகுந்து கொண்டதால் அது அரசியல் மேடையாகப் பரிணமிக்க ஆரம்பித்தமை துரதிர்ஷ்டமாகும்.
சரியோ பிழையோ? தமிழருக்கான மாற்றுத் தலைமை பற்றி நீண்டகாலமாகவே கோஷம் எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான தெரிவு இன்னமும் முன்வைக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
ஒரு தலைமை உருவாக்கப்படும்போது, முன்பிருந்த தலைமையை விட சகல விதத்திலும் மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இவ் விடயத்தில் மக்களுக்கும் தமிழ் கட்சிகளுக்குமிடையே பாரிய இடைவெளி இருக்கின்றது. இந்த இடைவெளி இல்லாமல் ஆக்கப்பட்டால்தான் பொருத்தமான நின்று நிலைக்க கூடிய தலைமைத்துவ பண்புகள் நிறைந்த ஜனநாயக தலைமையை உருவாக்க முடியும்.
இந்த விடயத்தில் கூட ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற தாரக மந்திரத்தை கைக்கொண்டு ஒற்றுமையாக ஒரு தலைமையை உருவாக்க முடியாத பலவீனமே தொடர்கின்றது.எமது சகோதர சமூகத்தில் கட்சிகள் குறைவு. சமூகத்திற்கான கருமங்கள் அதிகம்.
ஆனால் எமது சமூகத்தில் இருப்பது போதாதென்று கட்சிகள், கூட்டணிகள் இன்னமும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இருந்தும் , உருப்படியாக சமூகம் பயன்பெற்றதென்பது மிகமிக குறைவாகவே இருக்கின்றது.இன்று முக்கிய அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் தமிழ் மக்களுக்குமான தொடர்புகள் நீண்ட
காலமாக அறுந்த நிலையிலேயே காணப்படுகின்றன. கட்சிக் காரியாலயங்கள் தேர்தல் வந்தால் மட்டும் தலைகாட்டிவிட்டு, தேர்தல் முடிந்ததும் தேடுவாரற்ற கட்டடங்களாக மாறிவிடுவது கசப்பான உண்மையாகும்.
இதனால் கட்சியுடனான மக்களின் தொடர்புகள் கடினமானதாக அமைந்துவிடுகின்றது. தொடர்புகள் இலகுபடுத்தப்படாததால் அல்லது கிளைகளுக்கான கௌரவம் புறக்கணிக்கப்படுவதால். மக்களும் இயல்பாகவே கட்சிகளை புறக்கணிக்கும் மனநிலை உருவாகி விடுகின்றது.
இது மக்களை அரசியலிலிருந்து அந்நியப்படுத்தி விடுகின்றது. அரசியலில் அக்கறையற்றவர்களாக்கிவிடுகின்றது. இதனால் தேர்தலில் வாக்களிக்கும் மன நிலையையும் மாற்றி விடுகின்றது. அது வாக்களிக்கும் வீதத்தைக் குறைத்து எமக்கான பிரதிநிதித்துவத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல் எமது பிரதிநிதித்துவம் ஏனைய சமூகங்களுக்கு தாரை வார்ப்பதாகவும் அமைந்து விடுகின்றது.
இது கடந்தகால தேர்தல்கள் உணர்த்தும் அனுபவ பாடம். சந்தர்ப்பவாத அரசியல் செய்வோருக்கு மட்டும் இது ஒரு தாயம். தமிழ் மக்கள் இன்று தமிழ் அரசியல்வாதிகளினதும் போக்குகள் குறித்து நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றார்கள். கட்சிகளின் ஒற்றுமைக்கு யார் தடையாகச் செயற்படுகின்றார்கள் என்பதையும் கணித்து வைத்திருக்கிறார்கள்.
எனவே அரசியல் கட்சிகளைவிட மக்கள் தெளிவான மன நிலையில் இருக்கின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பேரம் பேசும் சக்தியை உச்சமாக இன்னமும் பயன்படுத்தவில்லை என்ற மனக்குறையும் இருக்கவே செய்கின்றது.
தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதில் முழு முயற்சியுடன் செயற்படவில்லை என்பதும், அதற்கான விட்டுக் கொடுப்புக்களை செய்ய முன்வரவில்லை என்பதும் மற்றொரு குற்றுச்சாட்டாகவே இருந்துவருகின்றது. எனினும் தமிழ் மக்கள் அரசியலில் தடம்மாறிச் செல்லும் நோக்கம் கொண்டவர்களாக இல்லை.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான முஸ்லிம் தரப்பினரின் நிலைப்பாடு, நிபந்தனை இன்று மருதமுனைக்கான ஒரு புதிய பிரதேச செயலகத்தை உடன் பெற்றுக் கொள்வதாக இருக்கின்றது. இதற்கு நற்பிட்டிமுனை , பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களை உள்வாங்குவதென்ற திட்டத்தையும் வகுத்திருக்கின்றார்கள்.
அதில் பெரியநீலாவணை பூர்வீக தமிழ் கிராமம். அது படிப்படியாக முஸ்லிம் தரப்பினரால் காவுகொள்ளப்பட்டு வருகின்றது. புதிய பிரதேச செயலகத்திற்குள் அது உள்வாங்கப்பட்டால் அது முற்றிலும் முஸ்லிம் மயப்படுத்தப்பட்ட கிராமமாக மாறிவிடும் ஆபத்து இருக்கின்றது.
புதிய பிரதேச செயலகம் உருவாக்கப்படுவது மக்களுக்கான அரசின் சேவைகளை இலகுபடுத்தும் என்பது உண்மையே. ஆனால் அது எந்தச் சூழலில் உருவாக்கப்படுகின்றது என்பது தான் பிரச்சினைகளை தோற்றுவிக்கின்றது.
30 வருடங்களுக்கு முன் அரசினால் உருவாக்கப்பட்ட பிரதேச செயலகம் அதிகாரம் இழந்து நிற்க புதிய பிரதேச செயலகம் ஒன்று உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எந்தளவுக்கு நியாயமானது என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.
அதேவேளை ,பட்டிருப்பு தொகுதியில் மண்முனை தென் எருவில் பற்றில் பெரியகல்லாறு, துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, மகிளுர். ஓந்தாச்சிமடம் கிராமங்களை ஒன்றிணைத்து பிரதேச செயலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கணேசலிங்கம் இக் கோரிக்கையை முன்வைத்திருந்தார். பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா அதற்கு முழு மூச்சான முயற்சிகளை எடுத்திருந்தார். அவரின் தேர்தல் தோல்வி இன்று அந்தக் கோரிக்கை கிடப்பில் கிடக்கின்றது.
அத்துடன் தமிழ் தனி தொகுதியான பட்டிருப்பு தொகுதியை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர் இல்லாதிருப்பத இப்பகுதி மக்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றது. பொன் செல்வராசாவாலும். அரியநேத்திரனாலும் பராமரிக்கப்பட்டு வந்த பட்டிருப்பு தொகுதி இன்று அநாதையாக இருக்கின்றது.
இந்நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு நிபந்தனையாக முஸ்லிம் தரப்பு மருதமுனை பிரதேச செயலகத்தை பேரம் பேசுவதுபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்தில் இருந்து கல்லாறு பிரதேச செயலகத்தை கோரும் பொன்னான வாய்ப்பு வந்திருக்கின்றது.
எனவே இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் தரப்பை விட அதிகளவு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால் கல்லாறு பிரதேச செயலகத்திற்காக உச்சக் கட்ட பேரம் பேசலை மேற் கொண்டு புதிய பிரதேச செயலகத்தை உருவாக்கித் தரவேண்டும் என்பது இப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடுகளை சீர் செய்வதற்கான அரிய சந்தப்பமாக இது காணப்படுகின்றது. முஸ்லிம் தரப்பு புதிதாக ஒன்றைக் கோரும்போது தமிழ் தரப்பும் அதற்குச் சமமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டிய தார்மிக கடப்பாடு அதற்கு பூரணமாக இருக்கின்றது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.