சஹரானின் பரம்பரை: மரத்தில் கட்டியிருப்பேன்: மேர்வின் சீற்றம்
28 Jul,2019
சஹரானின் ஆக்கிரமிப்பை விடவும் மிகப் பெரிய ஆக்கிரமிப்பையே மேற்கொண்டுள்ளதாகவும், இன்று அவர் இந்த இடத்தில் இருக்குமாயின் மரத்தில் கட்டி வைத்திருப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கெகிராவ, கலாவெவ, விஜிதபுர பிரதேசத்தில் ஒரு பகுதியில் காணப்படும் புராதன நினைச்சின்னங்கள் உள்ள பிரதேசத்தை, பெக்கோ இயந்திரத்தைப் பிரயோகித்து அழித்து, அங்கு மாங்காய் மற்றும் தென்னை மரங்களை நாட்டியுள்ளதாக கூறப்படும் இடத்தை நேற்று மாலை மேர்வின் சில்வா நேரில் சென்று கண்காணிப்புச் செய்துள்ளார். இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புராதன பிரதேசங்களை பாதுகாப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடமும், எதிர்க் கட்சியினரிடமும் இல்லை. இதனாலேயே இவ்வாறு நடைபெறுகின்றது.
நான் வருவதை கேள்வியுற்று இந்த சேதத்தை விளைவித்தவர் தலைமறைவாகியுள்ளார். அவர் இந்த இடத்தில் இருந்திருந்தால் மரத்தில் கட்டியிருப்பேன். இந்த காணியை ஒரு சிங்களவர் தான் எடுத்துள்ளார். இதன் பின்னர்தான் சஹரானின் பரம்பரையில் உள்ள முஸ்லிம் ஒருவர் எடுத்துள்ளார். நான் அந்தப் பேய்க்கும் சொல்கின்றேன். நீர் இன்று சிறையில் இருப்பது சிறந்தது. இங்கு இருந்திருந்தால் மரத்தில் கட்டிவிட்டுத் தான் நான் சென்றிருப்பேன்.
அடுத்த முறை நான் இந்தப் பிரதேசத்துக்கு வரும்போது இதுபோன்ற வேலையை செய்து கொண்டிருப்பின், செய்ய வேண்டிய வேலையை செய்து உம்மைப் பொலிஸில் ஒப்படைப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.