• ரூ. 250,000 ரொக்கம், தலா ரூபா 25 இலட்சம் கொண்ட 4 சரீரப் பிணைகளில் விடுதலை
கடந்த மே மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு குருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று (25) பிற்பகல் 1.00 மணியளவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வைத்தியரின் பிணை விண்ணப்பம் தொடர்பான உத்தரவிற்காக பிற்பகல் 5.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
வைத்தியர் ஷாபிக்கு எதிரான எவ்வித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை-Shafi Shihabdeen Released on Bail
இதன்போது, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டு, அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்தமை, சிசேரியனின் போது காயம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தும் வகையிலான எவ்வித சாட்சிகளும் இதுவரை கிடைக்கப் பெறாத நிலையில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை ரூ. 2 இலட்சத்து 50 ஆயிரம் (ரூ. 250,000) ரொக்கம் மற்றும் தலா ரூபா 25 இலட்சம் கொண்ட 4 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முன் ஆஜராகுமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டது.
இன்றைய தினம் (25) குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) சார்பில் பிரதி சொலிசிட்டர் நாயகம் நீதிமன்றத்தில் ஆஜராகி, அவரது விசாரணைகளின் முன்னேற்றம் அடங்கிய பி அறிக்கையை சமர்ப்பித்தார்.
சிஐடியினருக்கு பெண்களிடமிருந்து கிடைத்த 615 முறைப்பாடுகளில் 147 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் நீதிமன்றிற்கு தெரிவித்தார்.
அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் கருத்தரிக்க எடுத்த கால தாமதத்தின் அடிப்படையில் தாய்மார்கள் தேர்ந்தெடுத்து குறித்த முறைப்பாடுகள் தெரிவு செய்யப்பட்டதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
தண்டனை கோவைச் சட்டத்தின் பிரிவு 311 இன் கீழான, கடுமையான காயத்தை ஏற்படுத்துதல் எனும் குற்றச்சாட்டுக்கு அமைய, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், குறித்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையிலான எவ்வித சாட்சிகளும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வைத்தியர் ஷாபிக்கு எதிரான எவ்வித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை-Shafi Shihabdeen Released on Bail
இது குறித்தான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், விசாரணைகளை பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்..
இதேவேளை, தாய்மார்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எச்.எஸ்.ஜி. சோதனைகள் (HSG Test) குறித்தான கடந்த ஐந்து ஆண்டுக அறிக்கைகளை வழங்குமாறு, கொழும்பு காஷல் மகப்பேற்று வைத்தியசாலை மற்றும் சொய்ஷா மகப்பேற்று வைத்தியசாலைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும்படி அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
அதன்படி, நீதிபதி குறித்த உத்தரவை வழங்கினார். அவ்வாறே குருணாகல் போதனா வைத்தியசாலையின் மூன்று விசேட வைத்தியர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ள CID யினர் நீதிமன்றத்தை கோரினர்.
இதேவேளை, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், சொத்துக்களை சம்பாதித்த விதம் குறித்து விசாரணை இடம்பெற்றுவருவதாக, சிஐடி சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மன்றில் தெரிவித்தார்.
அத்துடன் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் நிபுணத்துவம் பெற்ற, 3 ஆவது பிரிவிடம் அவ்விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய நிதி மோசடி சட்டத்தின் கீழ், வைத்தியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவர் மீது வழக்குத் தொடர எதிர்பார்த்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்தது.
இருப்பினும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் குற்றம் செய்தமைக்கான எவ்வித சாட்சியங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை என, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 311 இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், அவருக்கு பிணை வழங்குவதில் எவ்வித எதிர்ப்பும் இல்லையென குற்றவியல் புலனாய்வுத் பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நவரத்ன பண்டாரா, தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.
தனது கட்சிக்காரர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
வைத்தியர் ஷாபிக்கு எதிரான எவ்வித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை-Shafi Shihabdeen Released on Bail
அவர் மேலும் தெரிவிக்கையில், தனது கட்சிக்காரர் மீதான குற்றச்சாட்டுக்கு, 14 நாட்கள் மாத்திரமே விளக்கமறியல் வைக்கப்பட வேண்டும். ஆயினும், எனது கட்சிக்காரர் அந்த காலகட்டத்தையும் தாண்டி விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.
வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும்போது, மேலும் பல வைத்தியர்கள் மற்றும் செவிலியர்கள் இந்நடவடிக்கைக்கு உதவுவார்கள் எனவும், தமது கட்சிக்காரர் தவறு செய்திருந்தால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர்களையும் பிரதிவாதி கூண்டில் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர், முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
குருணாகல் வைத்தியசாலையில் சிசேரியன் செய்யும் ஏனைய வைத்தியர்கள் மாதமொன்றிற்கு 19 அறுவை சிகிச்சைகளை மாத்திரமே மேற்கொள்கிறார்கள் எனவும், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் மாதத்திற்கு 40 அறுவை சிகிச்சைகள் செய்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
அறுவை சிகிச்சை செய்த அனைத்து தாய்மார்களும் சிங்களவர்கள் என்றும், காயம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் மாத்திரம் வைத்தியருக்கு எதிராக வழக்கு தொடர்வது பயனற்றது என்றும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர்.
சிஐடியால் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் கேள்வி எழுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
தாய்மார்கள் வைத்தியசாலைக்கு அளித்த வாக்குமூலங்களுக்கும், சி.ஐ.டி. யில் அளித்த வாக்குமூலங்களுக்கும் இடையே முரண்பாடு இருப்பதாகவும், அவர்களை பயமுறுத்தி வாக்குமூலம் பெற்றார்களா எனும் நியாயமான சந்தேகம் ஏற்படுவதாகவும் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
விஞ்ஞான ரீதியிலான விசாரணைகள் ஊடாக இதனை மேற்கொள்ளாது, குருணாகல் வைத்தியசாலையில் சிசேரின் அறுவைசிகிச்சை மேற்கொண்ட முஸ்லிம் தாய்மார்களிடமும் வாக்குமூலம் பெறுமாறு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டனர்.
மேலும், பாதிக்கப்பட்டோரை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னிலையான வழக்கறிஞர்கள், வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் அரச வங்கியொன்றில் உள்ள கணக்கு விபரத்தை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.
அதற்கமைய, இவ்வாண்டு மே 24 ஆம் திகதி நிலவரப்படி, அவரது வங்கிக் கணக்கின் மொத்த இருப்பு ரூ. 44 கோடி 20 இலட்சத்து 568 மற்றும் 11 சதம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்த கணக்கு இருப்பு ஒரு வங்கியில் மாத்திரம் உள்ளது என சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், அவருக்கு இவ்வளவு பணம் எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்பினர்.
வைத்தியர் தனது நியமனத்தை பெற்றுக் கொண்ட வேளையில், வழங்கிய சொத்து விபர அறிக்கையில் ரூ .7 இலட்சம் கடன் இருப்பதாக அவர் காண்பித்துள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, குறித்த வழக்கு ஓகஸ்ட் 09 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
வைத்தியர் ஷாபிக்கு எதிரான எவ்வித குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை.
இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றிற்கு வெளியே பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சிலர் நீதிமன்றிற்கு வெளியே, வைத்தியர் ஷாபிக்கு எதிராக பதாதைகளை ஏந்தியவாறு நின்றிருந்ததோடு, அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.