சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வழமைக்கு திரும்பும் அறுகம்பை
25 Jul,2019
இலங்கை சுற்றுலாத்துறையின் சொர்க்க புரியாகத் திகழும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில்- அறுகம்பை கடற்கரைப் பிரதேசம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் களைகட்டத் தொடங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னர் இலங்கையின் சுற்றுலாத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்து. இதனால் பிரசித்தி பெற்ற சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றான அறுகம்பை பிரதேசம் ஸ்தம்பிதமான நிலையில் காணப்பட்டிருந்தது.
தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையில், மீண்டும் அறுகம்பை பிரதேசத்தை நோக்கி வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதுவொரு ஆரோக்கியமான விடயமாகும். இந்த நிலைமை மேலும் அதிகரித்து சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படு கின்றது. அம்பாறை மாவட்டத்தின் அறுகம்பை குடாக்கரையானது, உலகப் புகழ்பெற்ற கடலலை நீர்ச்சறுக்கல் (சேர்பிங்) விளையாட்டுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஓரிடமாககாணப்படுவதுடன் இது உலகில் 10 ஆவது இடத்திற்குள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாவட்டத்தில் இதனுடன் அண்டிய மற்றுமொரு சுற்றுலாப் பிரதேசமாக குமண வனவிலங்கு சாரணாலயம் அமைந்துள்ளமை மற்றும் சுற்றுலாத்துறையினரை ஈர்க்கும் வகையிலான கலாசார பாரம்பரியங்கள், உணவு உற்பத்திகள், வனங்கள், மலைகள், குளங்கள், ஏரிகள், களப்புகள், கடல் என அத்தனை இயற்கை வளங்களும் இப்பிரதேசங்களில் நிறைந்து காணப்படுவது இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது எனலாம்.
பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த சுற்றுலாத்துறையை மிக விரைவாக வழமைக்கு கொண்டு வருவதற்கு இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சும் அரசாங்கமும் கடுமையான பிரயத்தனங்களை முன்னெடுத்து வந்ததன் பலனாகவே இன்று சுற்றுலாத்துறை வழமைக்கு திரும்பக் காரணமாக அமைந்தது என இலங்கை சுற்றுலா, கைத்தொழில் மன்றத் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தெரிவித்தார்.
சுற்றுலாத்துறையை மாத்திரம் நம்பி தொழில் புரிந்து வருகின்ற பொத்துவில் அறுகம்பை ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் கடந்த குண்டுத் தாக்குதலின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். இத்தாக்குதல் காரணமாக அதிகளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் அறுகம்பை பிரதேசத்திலிருந்து வெளியேறி இருந்தனர். இதனால் சுற்றுலாத் தொழில்துறை மூலம் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாது பெரும் கஷ்டமான நிலைக்கு முகம்கொடுத்து வந்திருந்தனர்.
பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து துரிதமாக நாட்டின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்தியது. அதன் விளைவாகவே மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி இலங்கைக்கு வரத்தொடங்கியுள்ளனர். இத னால் சுற்றுலாத்துறையை நம்பி தமது வாழ் வாதாரத்தை மேற்கொண்டு வந்த பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றார்.