விடுதலைப் புலிகளை எவ்வாறு தோற்கடித்தோம் என்று பிரித்தானிய படைகளுக்கு விளக்குகிறார்களாம் சிறிலங்கா படையினர்!
21 Jul,2019
சிறிலங்கா- பிரித்தானிய படைகள் இணைந்து, வரும் இந்த ஆண்டு பிற்பகுதியில், ஒப்பரேசன் ஈட்டி (‘Operation Spear’) என்ற பெயரில் கூட்டு இராணுவ ஒத்திகைகளை மேற்கொள்ளவுள்ளன.
ஒக்ரோபர் 27 ஆம் திகதி தொடக்கம், நவம்பார் 04ஆம் திகதி வரை இந்தக் கூட்டுப் பயிற்சி, 9 நாட்கள் நடைபெறவுள்ளன.
ஏதேனும் தீவிரவாதத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் நிகழ்ந்தால், தமது நாட்டவர்களை வெளியேற்றுவதை அடிப்படையாக கொண்டு பிரித்தானிய இந்த கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கிறது.
சிறிலங்கா படையினர் மனிதாபிமான உதவிகள், இடர் மீட்பு, மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை கற்றுக்கொள்வதற்கு இந்தப் பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளவுள்ளனர்.
இந்தக் கூட்டுப் பயிற்சி, தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது,
இந்தக் கூட்டுப் பயிற்சிக்காக சிறிலங்காவின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மருத்துவமனைகள் பயன்படுத்தப்படவுள்ளன.
ஏனைய மோதல் பகுதிகளில் பிரித்தானிய படைகள் பெற்றுக் கொண்ட உளவு மற்றும் காயமுற்றோரை மீட்பது தொடர்பான அனுபவங்களை இதன் போது வெளிப்படுத்துவார்கள்.
விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தினர் எப்படித் தோற்கடித்தனர் என்பதை பிரித்தானிய படையினர் அறிந்து கொள்வதற்கு இந்தக் கூட்டுப் பயிற்சி உதவும் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சியை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகமும், சிறிலங்கா அரசாங்கமும் இணைந்தே ஏற்பாடு செய்துள்ளன.