யுத்தக் குற்றச்சாட்டு – கோட்டாவுக்கு எதிராக அமெரிக்காவில் மீண்டும் வழக்குத் தாக்கல்
27 Jun,2019
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சித்திரவதை குற்றச்சாட்டுகளுடன் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மூன்று பெண்கள் உள்ளிட்ட 10 பேர் அமெரிக்காவின் கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இலங்கை படையினர் மற்றும் பொலிஸார், தமது அரசியல் எதிரிகளை சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறியே அவர்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
இவர்களில் ஆறு பேர் தாங்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
உளவியல் ரீதியாகவும் உடலியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தாங்கள் மிக மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது ஒரு தனியான சம்பவங்களோ, எங்காவது ஒன்றாக நிகழ்ந்தவையோ அல்ல என பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணிகளில் ஒருவரான ஸ்கொட் கில்மோர் ஏபி ஊடகங்கமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றங்கள் 2008ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின்போது கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு இராணுவ முகாம்களிலும் பொலிஸ் நிலையங்களிலும் ஆண்களும் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள், பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் கனேடியத் தமிழரான றோய் சமாதானம், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான மூல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரால் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் பெருமளவில் செய்யப்படுகின்றன என்பதை கோட்டாபய ராஜபக்ஷ அறிந்திருந்தார் என்றும் இந்த முறைகேடுகளைத் தடுப்பதற்குப் பதிலாக அவர் அவர்களை ஊக்குவித்தார் என்று இந்த வழக்கில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.