முஸ்லிம் பெண்ணின் கழுத்தில் கட்டிவீதியில் இழுத்துச் சென்ற கொடுமை:
27 Jun,2019
முச்சக்கரவண்டியில் வந்த இருவர் பாதையால் நடந்து சென்று கொண்டிருந்த முஸ்லிம் பெண் ஒருவடைய முந்தானையை பறித்து, அவரது கழுத்தில் கட்டி வீதியில் இழுத்துச் சென்ற சம்பவம் ஒன்று மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் நடந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில் மினுவாங்கொடை கல்லொழுவை கிழக்கு கிராமசேவகர் முஸ்லிம் பிரிவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
கொழும்பு அப்பல்வத்தையில் வசிக்கும் ஒரு முஸ்லிம் பெண்மணி, கல்லொழுவையில் வசிக்கும் அவரது மகள் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த திங்கட்கிழமை காலை 5 மணியளவில் மீண்டும் கொழும்பு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மினுவாங்கொட கொழும்பு வீதி திசையில் இருந்து திரும்பி கல்லொழுவ சந்தியால் வந்த ஒரு முச்சக்கரவண்டி, அந்த பெண்ணின் அருகே வேகத்தை குறைத்து மெதுவாக கடந்து சென்றது. மீண்டும் திரும்பி வந்து பெண்ணிண் அருகில் நிறுத்தியது.
முச்சக்கரவண்டியிலிருந்து இறங்கிய அந்தப் பெண்ணுடைய முந்தானையை இழுத்துப் பறித்து, அந்தப் பெண்ணின் கழுத்தில் கட்டி அவரை கீழே தரையில் தள்ளி விழுத்தினர். பின்னர் முச்சக்கரவண்டியில் சிறிது தூரம் இழுத்துச் சென்றனர். வீதியில் இழுபட்டு சென்ற பெண் அவலக்குரல் எழுப்பினார். பின்னர் முந்தானையை ஒருவாறு கழுத்தில் இருந்து விலக்கி, எழுந்து நின்று உதவிக்குரல் எழுப்பினார். இதையடுத்து, அந்த முச்சக்கர வண்டி தப்பிச் சென்றது.
பின்னால் வந்த முச்சக்கரவண்டியொன்று நடந்ததை விசாரித்து, அவரை வீட்டில் சேர்ப்பித்தது. தற்போது அந்த பெண் மினுவாங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக மினுவாங்கொட பொலிசிலும் முறையிடப்பட்டுள்ளது. அந்த பகுதியிலுள்ள சிசிரிவி கமரா காட்சிகளின் உதவியுடன் அந்த ரௌடிகளை இனம்காணும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.