4,000 பெண்களுக்கு மலட்டுத்தன்மை – விசாரணை குழுவை நியமித்ததது இலங்கை அரசு
26 Jun,2019
இலங்கையின் குருநாகல் பகுதியில் பெண்களுக்கு பிரசவத்தின் பின்னர் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையில் வைத்தியர் ஒருவரினால் 7,000 சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 4,000 அறுவை சிகிச்சைகளின்போது, பெண்களுக்கு மீண்டும் குழந்தை பிறக்காத வண்ணம் மலட்டு தன்மை ஏற்படுத்தப்பட்டதாகவும் சிங்கள ஊடகம் ஒன்றில் கடந்த மாதம் 23ஆம் தேதி செய்தி வெளியாகியிருந்தது.
இவ்வாறு வெளியான செய்தியை அடுத்து, இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அன்றைய தினமே கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
குறித்த பத்திரிகையில் வெளியான செய்தி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க சபாநாயகரை நோக்கி அன்றைய தினம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் தான் போலீஸ் மாஅதிபருடன் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், அவ்வாறான எந்தவித முறைப்பாடுகளும் தமக்கு கிடைக்கவில்லை என போலீஸ் மாஅதிபர் தன்னிடம் தெரிவித்ததாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.
எனினும், இந்த செய்தி தொடர்பில் தான் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக போலீஸ் மாஅதிபர் உறுதியளித்ததாக சபாநாயகர் கூறினார்.
குறித்த பத்திரிகை செய்தியில், மருத்துவரின் பெயர், விலாசம், தொழில் புரியும் மருத்துவமனை உள்ளிட்ட எந்தவித தகவல்களும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
இதையடுத்து, இந்த விடயம் நாட்டின் பல பகுதிகளில் பாரிய சர்ச்சையாக உருவெடுத்திருந்தது.
மருத்துவர் கைது
இந்த நிலையில், குருநாகல் போதனா மருத்துவமனையில் பணி புரியும் பிரசவ மற்றும் நரம்பியல் மருத்துவரான சியாப்தீன் மொஹமட் ஷாஃபி கடந்த மாதம் 24ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார்.
குருநாகல் – வீரசிங்க மாவத்தையிலுள்ள அவரது வீட்டில் வைத்தே குறித்த மருத்துவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் குறிப்பிட்டனர்.
அதிகளவில் சொத்து சேகரித்த விடயம் தொடர்பான விசாரணைகளுக்காகவே இந்த மருத்துவர் கைது செய்யப்படுவதாக போலீசார் அன்றைய தினம் அறிவித்திருந்தனர்.
எனினும், பெண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே சியாப்தீனை கைதுசெய்வதாக போலீசார் தனக்கு கூறியதாக குருநாகல் போதனா மருத்துவமனையின் வைத்திய அத்தியட்சகர் கடந்த மாதம் 25ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் இதற்கு முன்னர் குழந்தைகளை பெற்ற தாய்மார்களுக்கு மற்றுமொரு குழந்தை பிறக்காதிருக்குமானால், அது தொடர்பில் முறைப்பாடுகளை மருத்துவமனையில் பதிவு செய்யுமாறு வைத்திய அத்தியட்சகர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக குருநாகல் மருத்துவமனையில் விசேட பிரிவொன்றும் நிறுவப்பட்டது.
குருநாகல் மருத்துவமனைக்கு வந்திருந்த நிகவரெட்டிய பகுதியைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத பெண்ணொருவர், சில விடயங்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டார்.
2007ஆம் ஆண்டு தனக்கு 29 வயதாக இருக்கும் சந்தர்ப்பத்தில் முதலாவது குழந்தை பிறந்ததாகவும், அதனைத் தொடர்ந்து தனக்கு கரு உண்டாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனக்கு மற்றுமொரு குழந்தை வேண்டும் என்ற காரணத்தினால் தான் கடந்த 12 வருடங்களாக பல மருத்துவர்களை நாடிய போதிலும், தனக்கு இதுவரை குழந்தை பிறக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தனக்கும், தனது கணவருக்கும் மருத்துவர்கள் பரிசோதனைகளை நடத்தியதாக கூறிய அவர், முதலாவது குழந்தை பிறந்துள்ளமையினால் மற்றுமொரு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே, தான் இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடொன்றை பதிவு செய்வதற்கான குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு வருகைத் தந்ததாக அவர் தெரிவித்தார்.
சிலர் எழுத்துமூலம் தமக்கு முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதாகவும், பலர் வாய்மூலம் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதாகவும் மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.
‘தவறிழைத்தமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை’
இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் நடத்தும் விசாரணைகளுக்கு தமது சங்கம் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்தார்
கைது செய்யப்பட்ட குறித்த வைத்தியர் தவறிழைத்தமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என குறிப்பிட்ட அவர், அது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் நாட்டிலுள்ள சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க தாம் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மருத்துவமனை மட்டத்தில் நடத்தப்படும் விசாரணைகளை நிறுத்துமாறு மருத்துவமனையின் பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சர் அழுத்தம் விடுத்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அளுத்கே குறிப்பிட்டார்.
மருத்து பரிசோதனைகள்
இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை நடத்த மருத்துவர்கள் தலைமையிலான விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிட்டார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்களிடம் மருத்து பரிசோதனைகள் நடத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
2015ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்லில் குறித்த வைத்தியர் போட்டியிட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், உரிய அமைச்சரவை பத்திரத்தின் ஊடாகவே அவரை மீண்டும் தான் பணிக்கு இணைத்துக் கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், தான் இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைக்கும் வகையில் எந்தவித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பதிலளித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மருத்துவரின் குற்றப் புலனாய்வு பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை நடாத்திய வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.