தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலக்கீழ் அறை;
25 Jun,2019
இரத்தினபுரியில் உள்ள வீடொன்றில் நிலக்கீழ் அறை ஒன்றும், அதில் போலி அரசாங்க செயலகம் (கச்சேரி) நடத்திச் செல்லப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாயவில் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின் பேரில் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பெருமளவிலான போலி ஆவணப் பொருட்களை பொலிஸார் அங்கிருந்து மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து இரு இளைஞர்களையும், வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான புலனாய்வு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுரங்க அறையை சோதனையிட்ட பொலிஸார் அங்கு அரச அலுவலகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலரது பெயர்களுடன் கூடிய 68 ரப்பர் இலச்சினைகள், பிரபல சட்டத்தரணிகள் பலரது கையொப்பங்களுடன் கூடிய இலச்சினைகள் 05, காணி உறுதிகள் 15, மாநகர சபை வரிப்பண ஆவணங்கள் 23, பூமி ஆய்வியல் அறிக்கைகள் மற்றும் இரத்தினக்கல் அகல்வு அனுமதிப்பத்திரங்கள் 09, மணல் கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் 19, அடையாள அட்டைகள் 17, கிராம சேவை உத்தியோகத்தரின் சான்றிதழ்கள் 12, பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் 29, காணி தொடர்பான ஆவணங்கள் 06, மின்சாரக் கட்டண பற்றுச்சீட்டுக்கள் 65, வருமானவரி சான்றிதழ்கள் 06, க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுச் சான்றிதழ்கள் 12, ஸ்கேன் இயந்திரங்கள், கணனித் தொகுதிகள் ஆகியனவே மீட்கப்பட்டனவாகும்.
விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன