15 இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டு: அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில்
24 Jun,2019
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த 15 இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் மூவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) மூன்று அரசியல் கைதிகளும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த குறித்த அரசியல் கைதிள், “தங்கள் மீதான வழக்கு பொய்யான வழக்கு எனவும் நீதிமன்றத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளதால் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும்” தெரிவித்தனர்.
2012 ஆம் ஆண்டில் வெவ்வேறு காலப்பகுதியில் வவுனியாவில் இராணுவத்தினரை கொலை செய்த குற்றச்சாட்டில் மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் ஆகியோர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து அந்த குற்றச்சாட்டு தொடர்பாக 2014 ஆண்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் தடுத்துவைக்கப்பட்டனர்.
நீண்டகாலமாக அரசியல் கைதிகளாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களது வழக்கு தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டதுடன், 2017 ஆண்டு திருத்தப்பட்ட குற்றப்பத்திரத்தின் மூலம் இராசதுரை திருவருள் என்ற முன்னாள் போராளியும் குறித்த வழக்குடன் இணைக்கப்பட்ட்டார்.
இவர்கள் மீதான வழக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தமது வழக்குகளை மீண்டும் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரி இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.