19 ஆவது திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி அதிகாரமற்றவர் – மனுஷ
18 Jun,2019
19 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இருக்கும்வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரம் அற்றவர் என பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கட்டுபடுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தம் நடைமுறையில் இருக்கும் வரை ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமற்றவர். அரசியலமைப்பினூடாக நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவராக, பாதுகாப்பு அமைச்சராக, முப்படை தலைவராக ஜனாதிபதி செயற்படுகிறார்.
அதற்கமைவாக முப்படைகளின் தலைவராக யுத்தத்துக்கு அறிவித்தல், யுத்ததுக்கு அமைத்தல் போன்ற கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது.
எனினும் பாதுகாப்பு துறையின் அமைச்சர் என்ற வகையில் முப்படையினருடன் ஜனாதிபதி நெருங்கிய தொடர்பை வைத்துள்ளார்.
இது அரசியலமைப்பினூடாகவே பரிசீலிக்க வேண்டும். பாதுகாப்புத்துறை யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இந்த அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள விசேட அதிகாரங்களாகும்” என அவர் குறிப்பிட்டார்.