அயோக்கியர்களின் கடைசி அடைக்களமே தேசப்பற்றுக் கோஷம் : ரவுப் ஹக்கீம்
13 Jun,2019
அயோக்கியர்களின் கடைசி அடைக்களம் தேசப்பற்று என்ற கோஷமாகும் என ஒர் ஆன்மீக எழுத்தாளரான மார்க் பைன் என்பவர் கூறியுள்ளதாகவும், அதுதான் இலங்கையிலும் தற்பொழுது நடைபெறுகின்றது எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்றிரவு அரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
எமது நாட்டின் முன்னைய வரலாற்றில் தேசப்பற்று, தேசிய இயக்கம் என்ற விடயங்கள் நாட்டின் நன்மைக்கே பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது தீமைக்கே அது பயன்படுத்தப்படுகின்றது.
சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஏதேனும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது அதிகாரம் படைத்தவர் ஒர் ஆதங்கத்தினாலோ, உணர்ச்சிவசப்பட்டோ ஒரு கருத்தைக் கூறும் போது அது இனவாதமாக பார்க்கப்படுகின்றது. இதே விதமாக பெரும்பான்மைச் சமூகத்தின் மத்தியில் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாதத்தைத் தூண்டும் விதமாக பேச்சுக்கள் இடம்பெற்றாலும் அதனைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்கள். இது ஏன் என நிகழ்ச்சியை நடாத்திய ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்.