ஹிஸ்புல்லாஹ்விடமிருந்து 2000 கோடி சொத்து;
11 Jun,2019
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடமிருந்து சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கம் பொறுப்பேற்று இராணுவத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
அரேபிய கற்கை நிலையம் என்றுகூறி அமைக்கப்பட்டிருக்கும் மட்டக்களப்பு அரபு பல்கலைக்கழகத்தினால் ஒட்டுமொத்த தெற்காசிய வலயத்திற்கே பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பட்டுள்ள ரத்தன தேரர், ஸ்ரீலங்காவை இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்கான பின்னணி இந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றார்.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவின் முழுமையான வழிநடத்தலின் கீழ் தற்போதைய எதிர்கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அனுமதி பெறப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு அரபு பல்கலைக்கழகம் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
கண்டி திகன, அம்பாறை போன்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை அடுத்து இந்த மட்டக்களப்பு அரேபியப் பல்கலைக்கழகத்தை முன்னிலைப்படுத்தி தென்னிலங்கையில் கடும்போக்குவாத சிங்க – பௌத்த அமைப்புக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஓர் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து மட்டக்களப்பு அரபு பல்கலைக்கழகம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா உள்ளிட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக எதிர்ப்புக்கள் வலுப்பெற்று வந்த நிலையில், குற்றச்சாட்டை எதிர்கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் பதவி விலகியதுடன், அமைச்சர் ரிஷாட் பதியூதீனுடன் அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகிக்கொண்டனர்.
இந்த நிலையில் கொழும்பில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய அத்துரலியே ரத்தன தேரர், மட்டக்களப்பு அரபு பல்கலைக்கழகம் தொடர்பாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் யோசனை ஒன்றை முன்வைத்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அவர்,
“மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை இஸ்லாமிய அடிப்படைவாதப் பல்கலைக்கழகமாக பெயரிட விரும்புகிறேன். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தொழில்நுட்பக் கல்லூரி அமைப்பதற்காக அனுமதி பெறப்பட்டது. 17 ஆயிரம் பில்லியன் ரூபாய்கள் இதற்கு செலவிடப்பட்டுள்ளதோடு நிர்மாணப் பணிகள் 90 வீதம் பூர்த்தியாகியுள்ளன. ஷரியா சட்டத்தை மறைமுகமாக கற்பித்துக் கொடுப்பதற்காகவும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கற்றுக்கொடுக்கவும் இந்தப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. இது தெற்காசியாவிலுள்ள மிகப்பெரிய இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கற்றுக்கொடுக்கும் பல்கலைக்கழகமாகும். தெற்காசியாவிற்கு தற்கொலைக் குண்டுதாரிகளை உருவாக்குகின்ற தொழிற்சாலையாகவே அமையும்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுமதியும் இதற்கு பெறப்பட்டிருக்கவில்லை. சவூதி அரேபியாவிலிருந்து அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊடாக பெருந்தொகைப் பணம் இதற்கு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் முஸ்லிம் அடிப்படைவாதிகளை உருவாக்குவதற்காக பல்வேறு அரச சார்பற்ற நாடுகள் நிதியுதவிகளை வழங்கிவருகின்றன. அரேபிய மொழியைக் கற்றுக்கொடுப்பதற்கான போர்வையில் நிர்மாணிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழத்தின் ஊடாக இந்த நாட்டை முழுமையாக இஸ்லாமிய தேசமாக மாற்றியமைப்பதற்குத் தேவையான பின்னணியை உருவாக்கவும் பௌத்த மக்கள் அதிகமான வாழ்கின்ற இந்த அழகான பௌத்த நாட்டின் அடையாளத்தை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
சிறிலங்கா மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலக நாடுகளும் தற்போது அதி நவீன தொழில்நுட்டபத்துடன் கூடிய பயங்கரவாத அச்சுறுத்தல்களையே முகம்கொடுத்து வருவதாக தெரிவித்திருக்கும் அத்துரலியே ரத்தன தேரர், இதனால் சிறிலங்கா படையினருக்கு நவீன தொழில்நுட்பத்தை கற்பிக்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக மட்டக்களப்பு அரபு பல்கலைக்கழகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றும் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளார்.
“பயங்கரவாதமானது இன்று தொழில்நுட்பப் போராக மாறிவிட்டது. அதனால் இந்தப் பல்கலைக்கழகமானது தொழில்நுட்பப் போரை எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகளை ஸ்ரீலங்கா படையினருக்கு வழங்குகின்ற இடமாக மாற்றியமைக்க வேண்டும். அதேவேளை ஸ்ரீலங்கா படையினர் 50 வீதமும், ஏனைய இனத்தவர்கள் பங்கேற்கின்ற பல்கலைக்கழகமாக ஆரம்பிப்பதற்கான யோசனையை முன்வைக்கின்றோம். இந்த யோசனையானது நாடாளுமன்றத்தில் ஒருயோசனையாக நிறைவேற்ற முடியுமா? தனிநபர் பிரேரணையான நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என்பது குறித்து பின்னர் கலந்துரையாடுவோம். இந்தப் பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்கி தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாக மாற்றியமைக்க வேண்டும். ஸ்ரீலங்கா படையினருக்கு தொழில்நுட்பங்களை கற்றுக்கொடுக்கும் இடமாக இதனை மாற்றியமைக்க வேண்டும்” என மேலும் அவர் தெரிவித்தார்.