ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ச; மஹிந்த குடும்பத்தில் அதிரடி திருப்பம்!
08 Jun,2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக்சவுக்கு பதிலாக பசில் ராஜபக்ச நிறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜபக்ச குடும்ப உறவினர்கள் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மெதமுலன டி.ஏ. ராஜபக்ச அருங்காட்சியகம் மற்றும் உருவச்சிலையை நிர்மாணிக்க அரசுக்கு சொந்தமான 33.9 மில்லியன் பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணை அவருக்கு பாதகமாக அமையும் என ராஜபக்ச குடும்பத்தினர் கருதுகின்றனர். இதனால், ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்பட கூடிய ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பொருத்தமான நபர் பசில் ராஜபக்ச என்பது அவர்களின் நிலைப்பாடாக இருப்பதாகவும் பேசப்படுகிறது.
இதனிடையே மகிந்த ராஜபக்ச இணங்கினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக பசில் ராஜபக்ச, ராஜபக்ச குடும்ப உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சில தினங்களுக்கு முன்னர் தனது பேஸ்புக் கணக்கில் பதிவு ஒன்றை இட்டிருந்த பசில் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் பிரதமர் வேட்பாளர் தயார் எனக் கூறியிருந்தார்.
அத்துடன் பசில், இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் சமூக வலைத்தள பரப்புரை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
பசில் ராஜபக்சவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கான பணிகள் விலி கமகே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பொறுப்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் கொள்கை ரீதியான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பொறுப்பு பல்கலைக்கழக விரிவுரையாளரான சரித ஹேரத் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கை மற்றும் அமெரிக்காவின் குடியுரிமையை கொண்டுள்ள பசில் ராஜபக்ச, இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தடையாக இருப்பதுடன், அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்யும் நடவடிக்கைகளை அவர் ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.