போட்டியில் இருந்து விலகுகிறார் மைத்திரி – ஐதேக பக்கம் சாய்கிறார்
06 Jun,2019
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. மஹிந்த தரப்புடனும் இணையப்போவதில்லை. ஐக்கிய தேசிய முன்னணி தங்களது வேட்பாளர் யார் என்பதை அறிவித்து அரசியல் வேலைத்திட்டங்களை திறம்பட செயற்படுத்தினால் ஒத்துழைப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கத் தயார். இல்லையேல் அடுத்த தேர்தலில் மத்தியஸ்தமாக செயற்படுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது அமைச்சரவைப் பத்திரங்கள் தொடர்பில் ஆராயப்பட்ட பின்னர் பிற விடயதானங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடப்போவதில்லை. மஹிந்தவுடனும் இணையப்போவதில்லை. ஐக்கிய தேசிய முன்னணியினராகிய நீங்கள் உடனடியாக அரசியல் செயற்பாட்டினை ஆரம்பிக்கவேண்டும்.
அரசியல் செயற்றிட்டம் உங்களிடம் காணப்படவில்லை. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் அறிவித்து அரசியல் வேலைத்திட்டத்தை திறம்பட நீங்கள் மேற்கொள்வீர்களாயின் அதன்போது ஒத்துழைப்பை வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.
இல்லாவிட்டால் நான் நடுநிலைமையாக இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.
மஹிந்த அணியினர் முழுமையாக சிங்கள பௌத்த வாக்குக்களை வெற்றிபெறலாம் என்று கருதியுள்ளனர். சிறுபான்மை மக்களது வாக்குக்கள் கிடைக்காது என்பதனால் சிங்கள பௌத்த வாக்குகளை முழுமையாக பெற்று வெற்றிபெறுவதற்கு அவர்கள் முயல்கின்றனர்.
இதனால்தான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதில் மஹிந்த அணியினரது உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கு அமைச்சை கோருவதை விடுத்து நீங்கள் அரசியல் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும்.
சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பெறுவது முக்கியமல்ல. அரசியல் செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதே முக்கியமானதாகும். பிரதமரும் அமைச்சர்கள் சிலரும் என்னை நேற்று (நேற்று முன்தினம்) இரவு சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது சட்டம் ஒழுங்கு அமைச்சை வழங்குமாறு அவர்கள் கோரினார்கள்.
சட்டம் ஒழுங்கிற்கு இராஜாங்க அமைச்சரை நியமிப்பதற்கு நான் தயாராக உள்ளேன். ஆனால் ருவன் விஜயவர்த்தனவை அந்தப் பதவிக்கு நியமிக்க முடியாது.
அவர் பலவீனமான ஒருவராக காணப்படுகின்றார். எனவே பலமான ஒருவரை பிரேரித்தால் இராஜாங்க அமைச்சை வழங்க முடியும்.
இது குறித்து பிரதமரிடம் நான் எடுத்துக்கூறியுள்ளேன். அதனை தற்போது உங்களுக்கும் கூறிவைக்க விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்றும் அந்தத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என்றும் அதற்கு இன்னமும் கால அவகாசம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிலைப்பாட்டினை விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.