ரிஷாட், ஹிஸ்புல்லா, அசாத் சாலியை பதவி நீக்கவும் – ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டம்
31 May,2019
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உணர்வு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். அத்தோடு பலர் காயமடைந்திருந்தனர்.
இதனையடுத்து இந்த தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
குறிப்பாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோருக்கு நேரடித் தொடர்புள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
மேலும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை விடுவிக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராணுவத்தளபதியிடம் கோரியிருந்ததாக இராணுவத்தளபதி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றதைத் தொடர்ந்து ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் ரிஷாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்திருந்தார்.
இதனையடுத்து ரிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் விவாதங்களை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உட்பட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படும் ஆளுநர்களையும் பதவி விலக்குமாறு வலியுறுத்தி அதுரலிய ரத்தன தேரர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
ரிஷாட் தொடர்பாக முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முடிவெடுப்போம் – கூட்டமைப்பு
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லத் தீர்மானம் குறித்து தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் பாதிக்காத வகையிலான ஒரு முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மேலும், வடக்கும் கிழக்கும் இணையும் என்பதில் கூட்டமைப்பு தொடர்ந்தும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் இதற்கு முஸ்லிம் தலைவர்களும் ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை தொடர்பாக முஸ்லிம் மக்களின் உணர்வுகள் பாதிக்காத வகையில் அவர்களின் இருப்புக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாதவாறு ஒரு தீர்மானத்தை மேற்கொள்வோம்.
ரிஷாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கான தண்டனையை நீதிமன்றம் வழங்க வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக தற்போது முஸ்லிம் மக்கள் உள்ள நிலையில் பேசுவது தவறு. ஆனால் அவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படாதவாறு அவர்களிடம் இந்த விடயம் குறித்து நீதியான முறையில் நாங்கள் கலந்துரையாடுவோம்” என மேலும் தெரிவித்தார்.