குருணாகலில் வைத்தியருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் – கடைகள் அடைப்பு
29 May,2019
குருணாகல் வைத்தியருக்கு எதிராக குருணாகல் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் சிஹாப்தீன் ஷாபிக்கு எதிராக கருத்தடை சத்திரசிகிச்சை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அவருக்கெதிராக இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில், பௌத்த குருமார், பாதிரியார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், குருநாகல் நகரிலுள்ள வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இதன்போது, வைத்தியர் ஷாபி மீதான விசாரணைகளை முன்னெடுக்கும் வைத்தியர் சரத் வீரபண்டாரவை இடமாற்றம் செய்வதற்கு சுகாதார அமைச்சர் முயற்சிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வைத்தியர் ஷாபிக்கு எதிராக முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, வைத்தியர் சிஹாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இன்றும் பெண்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இன்று காலையில் குருணாகல் பொது வைத்தியசாலைக்கு சென்ற சுமார் 20 பெண்கள், தமக்கு கருத்தடை சத்திரசிகிச்சை செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக நேற்று வரை 51 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்தும் முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.