மதத் தலைவர்களால் முடியும் -அரசியல்வாதிகள் தேவையில்லை - ஞானசார தேரர்
29 May,2019
இஸ்லாமிய அடிப்படைவாதத்தினால் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசியல்வாதிகள் தலையிடத் தேவையில்லை. மதத் தலைவர்களால் தீர்த்து வைக்க முடியும் என்று கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
அத்துடன் பாதுகாப்புப் பிரிவினருக்குக் கட்டளை பிறப்பித்தல், அவை நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்தல் போன்ற விடயங்களில் மாத்திரம் அவர்கள் தலையீடு செய்தால் போதுமானதாகும்.
விடுதலைப் புலிகளின் போராட்டம் தொடங்கிய போதே இந்நாட்டின் அரசியல்வாதிகள் அதற்கான காரணம், பின்னணி குறித்து ஆராய்ந்திருந்தால் அந்தப் போராட்டத் முப்பது வருடகால யுத்தமாக நீண்டிருக்காது.
பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். நாடு மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்காது. ஆனால் அந்தப் பிரச்சினையை அரசியல்வாதிகள் தமக்கான நலன்களைப்பெறும் காற்பந்தாக மாற்றினார்களே தவிர தீர்வு காணவில்லை.
அதேபோன்று ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் நடைபெற்றதன் பின்னர் ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் செயற்படுகின்ற விதம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இத்தருணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற முன்னுதாரணத்தைக் காண்பிக்காமல், மேலும் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.